இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது. நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணிக்காக வாங்கப்பட்ட 21 வயதான இங்கிலாந்து வீரர் அறிமுகம் ஆகிறார்.
இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 28ஆம் தேதி துவங்கும் நிலையில் முன்கூட்டியே இங்கிலாந்து தனது பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது.
இந்திய அணிக்கு முக்கியமான தொடர்
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு நியூசிலாந்து அணியும் போட்டியில் இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்று போட்டிகளையும் வென்றால் நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும். எனவே இந்தத் தொடரில் இங்கிலாந்து வெல்வது இந்திய அணிக்கு முக்கியமானது.
இந்தத் தொடரின் முதல் போட்டி நவம்பர் 28ஆம் தேதி, இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி, மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது. நியூசிலாந்து அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஸ் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு எல்லா வகையிலும் முயற்சி செய்யும்.
விக்கெட் கீப்பராகும் துணை கேப்டன்
இந்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பர் ஜோர்டான் காக்ஸ் இடம் பெறவில்லை. மேலும் வழக்கமான விக்கெட் கீப்பரான ஜேமி ஸ்மித் தனது மனைவியின் முதல் பிரசவத்திற்காக இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. எனவே துணை கேப்டன் ஒல்லி போப் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார். இதன் காரணத்தால் அவர் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு வருகிறார்.
மேலும் இந்த போட்டியில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணிக்காக 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஜேக்கப் பெத்தேல் அறிமுகம் ஆகிறார். அவர் பேட்டிங் வரிசையில் ஒல்லி போப்பின் மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறார்.
இதையும் படிங்க : ஒரே நாளில் 17 விக்கெட்.. ஆச்சரியமான டிக்ளர்.. வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் டெஸ்ட் சுவாரசிய கட்டம்
இங்கிலாந்து பிளேயிங் லெவன் :
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப் (வி.கீ ), பென் ஸ்டோக்ஸ் (கே), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷீர்.






