இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிக்கு செல்வதற்கு முக்கியமான போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடும் போட்டி பார்வர்ட் ஆஃப் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் 6 பந்துகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அமெரிக்க அணியை இங்கிலாந்து சுருட்டி இருக்கிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அமெரிக்க அணி 160 ரன்கள் எடுத்தால், அதை திருப்பி இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் எடுத்தால், தென் ஆப்பிரிக்காவை விட அதிக ரன் ரேட் பெற முடியும். மேலும் இரண்டாவது பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலை இருந்தது.
அமெரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ஸ்டீவன் டைலர் 13 பந்தில் 12 ரன், ஆண்ட்ரீஸ் கவுஸ் ஐந்து பந்தில் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து கேப்டனும் அமெரிக்கா அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஆரோன் ஜோன்ஸ் 16 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இவர்களைத் தொடர்ந்து அமெரிக்க அணிக்கு நிதீஷ் குமார் 24 பந்தில் 30 ரன்கள், கோரி ஆண்டர்சன் 28 பந்தில் 29 ரன், ஹர்மீத் சிங் 17 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்கள். அமெரிக்கா அணி 18. 5 ஓவரில் 115 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோர்டான் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த போட்டியின் 18வது ஓவரின் கடைசிப் பந்தில் ஹர்மீத் சிங் விக்கட்டை சாம் கரன் கைப்பற்றினார். இதற்கு அடுத்து 19வது ஓவரை வீசிய ஜோர்டான் முதல் பந்தில் கோரி ஆண்டர்சன் விக்கெட்டையும், மூன்றாவது பந்தில் அலிகான், நான்காவது பந்தில் கென்ஜிகே, ஐந்தாவது பந்தில் நெட்ரவால்கர் விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியில் 6 பந்துகளில் 5 விக்கெட் விழுந்தது. மேலும் ஒரே ஓவரில் 4 விக்கெட்டையும், அதில் ஹாட்ரிக் விக்கெட்டையும் ஜோர்தான் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணிக்காக டி20 கிரிக்கெட்டில் முதன் முதலில் ஹாட்ரிக், இங்கிலாந்து அணிக்காக முதன் முதலில் டி20 உலக கோப்பையில் ஹாட்ரிக், இங்கிலாந்து அணிக்காக முதன் முதலில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகள் என மூன்று சாதனைகளை கிறிஸ் ஜோர்டான் படைத்திருக்கிறார்.