தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி பிரம்மாண்ட உலகச் சாதனையை படைத்திருக்கிறது.
மூன்று போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது.
இங்கிலாந்தின் இரண்டு சதங்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 96 பந்துகளில் 100 ரன்கள், இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக 82 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார்கள். இந்த கூட்டணியின் அதிரடியால் இங்கிலாந்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைந்தது.
இதை பயன்படுத்திக் கொண்ட ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் 32 பந்தில் 62 ரன்கள், வில் ஜேக்ஸ் 8 பந்தில் 19 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து உலகச் சாதனை
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20. 5 ஓவரில் வெறும் 72 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கார்பின் போஸ் 20 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 4, ஆதில் ரஷீத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : 191 ரன்.. அவமானத்தில் தப்பிய இலங்கை.. அசர வைத்த ஜிம்பாப்வே அணி.. பயந்து போன ரசிகர்கள்
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற உலகச் சாதனையை வைத்திருந்தது. தற்பொழுது இந்த உலகச் சாதனையை 342 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி உடைத்திருக்கிறது.






