இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஆல் ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 4.2 ஓவர்களில் 52 ரன்கள் குவித்து தங்களது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது.
அதிரடியாக விளையாடிய ஹெட் 14 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 31 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்குப் பிறகு மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 50 ரன்கள் குவித்து தனது சிறப்பான பேட்டிங்கைப் பதிவு செய்தார்.அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் கணிசமான பங்களிப்பை அளிக்க 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைமையில் களமிறங்க இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் 12 ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சால்ட் சிறப்பாக விளையாடி 23 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு மிடில் வரிசையில் களமிறங்கிய ஆல் ரவுண்டர் லியான் லிவிங்ஸ்டன் 47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் என 185 ஸ்ட்ரைக் ரேட்டில் 87 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். மற்றொரு மிடில் வரிசை பேட்ஸ்மேன் பெத்தல் 24 பந்துகளில் 44 ரன்கள் குவிக்க முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ ஷார்ட் அபாரமாக பந்துவீசி 17 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க:பாக் உடனான வெற்றிக்கு காரணமே அந்த ஒரு வார்த்தைதான்.. அடுத்த தொடருக்கும் இப்படித்தான் ஆடுவோம் – வங்கதேச வீரர் பேட்டி
இங்கிலாந்து அணி வெற்றிக்கு பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளும் பேட்டிங் செய்து 87 ரன்கள் குவித்த லிவிங்ஸ்டண் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தொடரை நிர்ணயிக்கப் போகும் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.