இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஐந்தாவது நாளில் 350 ரன்னை துரத்தி இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் டங் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருக்கிறது. இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி வெங்கட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருக்கிறது. மேற்கொண்டு ஐந்தாவது நாளில் 10 விக்கெட் கைவசம் இருக்க 350 ரன்கள் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு தேவைப்படுகிறது.
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய துவக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் சதம் அடித்து இந்திய அணி சவாலான கோரை நிர்ணயிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். மேலும் நான்காவது நாளில் ஆடுகளத்தின் தன்மை மாறி இருப்பதாக அவர் கருதுகிறார்.
இதுகுறித்து கேஎல்.ராகுல் பேசும் பொழுது “நிச்சயமாக இந்த போட்டியில் முடிவு இருக்கும். இங்கிலாந்து அணி விளையாடும் பாணியில் அவர்கள் சொல்லக்கூடியது இதுவாகத்தான் இருக்கும். அவர்கள் அதிரடியாக விளையாடப் போகிறார்கள் என்பது உறுதி. எனவே எங்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆடுகளத்தில் எந்த ஒரு நேரத்திலும் உறுதியாக இருப்பதாக உணரவில்லை. ஆடுகளத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. ஐந்தாவது நாளில் ஆடுகளம் இன்னும் உடையும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் கடைசி கட்ட விக்கெட்டுகளை இரண்டு இன்னிங்ஸ்களிலும் வீழ்த்துவதற்கு மிக முக்கியமான காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் டங் இருந்தார். அவர் மிக உறுதியாக தங்கள் அணி இந்த ரன்னை எடுத்து வெற்றி பெறும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் அழுத்தத்தில் இருந்தா.. இப்படி பேசிதான் தன்னை சமாதானம் பண்றாரு.. நானே கேட்டேன் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
இதுகுறித்து ஜோஸ் டங் பேசும் பொழுது “நாங்கள் வெற்றிக்காகவே களமிறங்கி விளையாடுவோம். இதுதான் எங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருந்து வரும் செய்தி. நாங்கள் முடிந்தவரை நேர்மறையாக இருப்போம். அவர்கள் கடைசி நாளில் சில சிறப்பான பந்துவீச்சை வீசுவார்கள். ஆனால் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் அதிலிருந்து வெளியில் வந்து சாதிப்போம். இந்த ஸ்கோரை எங்களால் ஏன் எடுக்க முடியாது? நிச்சயம் நாங்கள் எடுத்து வெற்றி பெறுவோம்” என்று கூறியிருக்கிறார்.