பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணியை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் பேட்டிங்கில் காப்பாற்றி இருக்கிறார்.
இந்த தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
காப்பாற்றிய ஜேமி ஸ்மித்
முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி 29, துணை கேப்டன் ஒல்லி போப் 3, ஜோ ரூட் 5, ஹாரி புரூக் 5, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டெக்கேட் 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணி 118 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் ஜோடி அருமையாக விளையாடி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கஸ் அட்கின்சன் 39 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 119 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 267 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சஜித் கான் 6, நோமன் அலி 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பாகிஸ்தான் அணி மூன்று முக்கிய விக்கெட் இழப்பு
இதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சையும் அயூப் 19 மற்றும் அப்துல்லா ஷபிக் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். பாபர் அசாம் இடத்தில் வந்து இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்த கம்ரன் குலாம் இந்த போட்டியில் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : இது எல்லாமே அவரோட திட்டம்.. எடுத்த 7 விக்கெட்ல இந்த 2 விக்கெட் பிடிச்சது – வாஷிங்டன் சுந்தர் பேட்டி
தற்போது முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 73 ரன்கள் எடுத்திருக்கிறது. 194 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. களத்தில் கேப்டன் ஷான் மசூத் 16, துணை கேப்டன் சவுத் ஷகில் 16 ரன்களுடன் நிற்கிறார்கள். சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து அணிவைத்திருப்பதால், இப்போதைக்கு இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கைகள் ஓரளவுக்கு ஓங்கி இருக்கிறது!






