நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டி மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, இரண்டாவது நாளிலேயே போட்டியை முழுவதுமாக தன் பக்கம் கொண்டு வந்திருக்கிறது.
இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்து மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் விளையாடும் டீம் சவுதிக்காக நியூசிலாந்து வெற்றி பெறும் கட்டாயத்தில் களம் இறங்கியது.
முதலில் காப்பாற்றிய சான்ட்னர்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது. முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரை சதம் எடுக்கவில்லை. பேட்டிங் வரிசையில் லோயர் ஆர்டரில் வந்த மிட்சல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி 117 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து 347 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடுவதற்கு களம் இறங்கியது. அந்த அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் வந்த பொழுது முதல் விக்கெட் விழுந்தது. துவக்க ஜாக் கிரவுலி 21 ரன், பென் டக்கெட் 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
111 ரன்னுக்கு 10 விக்கெட்
இங்கிலாந்து அணி இந்த போட்டியில் விக்கெட் இழப்பில்லாமல் 32 ரன்கள் எடுத்திருந்து, அங்கிருந்து மேற்கொண்டு 111 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 விக்கெட்டுகளையும் இழந்து, 143 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் 42 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4, வில்லியம் ஓ’ரூர்க் மற்றும் சான்ட்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். கடைசி டெஸ்டில் விளையாடும் டீம் சவுதிக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : ரோகித் கம்பீர் பயப்படறாங்க.. விராட் சாஸ்திரி செஞ்ச அந்த ட்ரிக் இவங்க கிட்ட இல்ல – தினேஷ் கார்த்திக் விமர்சனம்
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 340 ரன்கள் முன்னிலையும் பெற்றிருக்கிறது. வில் யங் 60 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். கேன் வில்லியம்சன் 50 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். இப்போதைக்கு இந்த போட்டி முழுவதுமாக நியூசிலாந்து கையில் இருக்கிறது!






