2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி புரூக் வெளியேறி இருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஹாரி புரூக் ஏற்கனவே கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறி இருந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 6.25 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கி இருந்தது. இந்த முறை கட்டாயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
நான் நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்கிறேன்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். என்னுடைய வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோருடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இதற்காக டெல்லி என நிர்வாகம் மற்றும் அதன் ரசிகர்கள் அனைவரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் சிறுவயதில் இருந்தே என் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். மேலும் நான் விரும்பும் விளையாட்டை இந்த சர்வதேச மட்டத்தில் விளையாடுவதற்கு மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்”
“தற்போது நான் என் நாட்டிற்காக விளையாடுவதற்கு பெரிய அளவில் தயாராக வேண்டி இருக்கிறது. இதற்காக என்னை ரீசார்ஜ் செய்து கொள்ள நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே என்னால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு கிடைத்த வாய்ப்புகள், நான் பெற்றுக் கொண்ட ஆதரவுக்கு உண்மையில் நான் நன்றியுள்ளவனாக தொடர்ந்து இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
ஐபிஎல் விதி என்ன சொல்கிறது?
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு விலகுவது குறித்து முக்கிய விதி ஒன்று சேர்க்கப்பட்டது. மேலும் மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் பங்கேற்று பெரிய தொகை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு செக் வைக்கும் விதமாகவும் விதிகள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயர்தான் இந்த தொடர்ல ஹீரோ.. அவர் செஞ்ச அந்த வேலைய மட்டும் மறக்க மாட்டேன் – ரோகித் சர்மா நெகிழ்ச்சி
இதுகுறித்து ஐபிஎல் விதியில் “ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்து, மேலும் ஏலத்தில் ஒரு அணி வாங்கிய பிறகு, ஒரு வீரர் விலகுவார் என்றால், அவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடர் மற்றும் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது. அவருக்கு இதில் தடை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கு தடை விதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.






