இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த விதம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணி தோல்வி
நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் பென் டக்கட் ஆகியோர் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதற்கு பின்னால் வந்த இங்கிலாந்து வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 52 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஜோடி சரியாக கை கொடுக்காவிட்டாலும் துணை கேப்டன் சுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்கள் மற்றும் அக்சார் பட்டேல் 52 ரன்கள் என சிறப்பாக விளையாடி விட்டுச் செல்ல கில் 87 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் தோல்விக்கு பிறகு ஜாஸ் பட்லர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
எங்கள் செயல்பாடு வெறுப்பா இருக்கு
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் முதலில் விளையாடிய போது பவர் பிளேவில் அருமையான தொடக்கத்தை பெற்றோம். ஆனால் எதிர்பாராத நேரத்தில் 4 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்தது வெறுப்பூட்டுவதாக அமைந்தது. கடைசியில் நாங்கள் விளையாடிய விதத்தை பார்த்தால் இன்னும் 40-50 ரன்கள் எடுத்திருந்தால் எங்கள் அணிக்கு இன்னும் உதவிகரமாக அமைந்திருக்கும்.
இதையும் படிங்க:கம்பேக் கொடுத்த கில்.. ஜடேஜா ராணா மாஸ்.. இந்திய முதல் ஒருநாள்.. இங்கி படைத்த விசித்திர சாதனை
கொத்துக்கொத்தாக விக்கெட்டுகள் இழப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் வீரர்கள் நன்றாக தொடங்கினார்கள். எதிரணி 20 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதற்குப் பிறகு அந்தக் கூட்டணியை உருவாக்கிய பெருமை நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கில்லுக்குதான் சேரும். நாம் இன்னும் நீண்ட தூரம் சிறப்பாக விளையாட வேண்டும். எனவே அடுத்த போட்டியில் இந்தத் தோல்வியை மறந்து சிறப்பாக செயல்படுவோம்” என்று ஜாஸ் பட்லர் கூறியிருக்கிறார்.






