இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இங்கிலாந்து வென்றது. இதை யாருமே எதிர்பார்க்காத வெற்றியாக அமைந்தது.
இதற்கு அடுத்து முக்கிய வீரர்களை இழந்து இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் வென்று இங்கிலாந்து அணிக்கு தக்க பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதலில் சரிவை சந்தித்தது. இதற்கு அடுத்து இந்திய அணியை ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா காப்பாற்றினார்கள்.
அதே சமயத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் செய்ய வந்த பொழுது அந்த அணிக்கு மிகச் சிறந்த தொடக்கம் பென் டக்கெட்டால் கிடைத்தது. ஆனால் அந்த துவக்கத்தை தவறவிட்டு இங்கிலாந்து அணி 319 ரன்களில் சுருண்டு, இந்திய அணிக்கு 126 ரன்கள் முன்னிலை தந்தது.
இந்த முன்னிலை இந்திய அணியை மேற்கொண்டு 430 ரன்கள் குவிக்க வைத்தது. இதன் காரணமாக 556 என்ற மெகா இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 434 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தற்போது தொடரில் இரண்டுக்கு ஒன்று என பின்தங்கி இருக்கிறது.
தோல்விக்குப்பின் பேசியுள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறும்பொழுது “பென் டக்கெட் நம்ப முடியாத இன்னிங்ஸ் விளையாடினார். அவர் விளையாடியது போல்தான் அனைவருமே விளையாட விரும்பினோம். அதுதான் எங்களுடைய வழிமுறை.
நாங்கள் எங்கள் வழியில் நிறைய ரன்கள் குவித்து நேற்று இந்திய அணிக்கு பந்து வீச விரும்பினோம். ஆனால் அது கொஞ்சம் முன்கூட்டியே நடந்து விட்டது. சில நேரங்களில் நம் கேம் பிளான்கள் சரியாக அமையாது. எங்களுக்கு இந்த போட்டியில் அப்படித்தான் நடந்து விட்டது.
இங்கு ஒவ்வொரு விஷயங்கள் குறித்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித கருத்துகள் இருக்கும். ஆனால் எங்களுக்கு டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பவர்கள் மிகவும் முக்கியம். தற்பொழுது தொடரில் நாங்கள் இரண்டுக்கு ஒன்று என பின்தங்கி இருப்பது, மீண்டும் வந்து தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு.
இதையும் படிங்க : “சர்பராஸ் கான் யாருனு நல்லா தெரியும்.. ஜெய்ஸ்வால் பற்றி பேச விரும்பல”- வெற்றிக்கு பின் ரோகித் சர்மா பேட்டி
நடந்து முடிந்த இந்த போட்டியை மறந்து விட்டு அடுத்த இரண்டு போட்டியை வெல்வது குறித்து நாம் சிந்தித்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். நாங்கள் அடுத்து அதைத்தான் செய்யப் போகிறோம்” எனக் கூறியிருக்கிறார்.