ஐ.பி.எல் கிரிக்கெட்டின் பரபரப்புகள் அடங்கி உலக கிரிக்கெட் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறது என்றே கூறலாம். உலக கிரிக்கெட் நாடுகளின் முக்கிய வீரர்கள் பலர் ஐ.பி.எல் தொடரில்தான் இருந்தனர். வேறெந்த பெரிய கிரிக்கெட் தொடர்களிலுமே ஐ.பி.எல் காலத்தில் நடத்தப்படுவதும் இல்லை.
இந்த நிலையில் இங்கிலாந்திற்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி சென்றிருக்கிறது. சஸக்ஸ் கவுன்டி அணியுடனான முதல் பயிற்சி ஆட்டம் டிராவாக, இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் கவுன்டி செலக்ட் லெலன் அணியுடன் தோற்றிருந்தது நியூசிலாந்து.
இரண்டு பயிற்சி ஆட்டங்களும் முடிவடைந்திருக்க, இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும், நியூசிலாந்தைச் சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம் பயிற்சியாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அந்த முடிவு தவறானது என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு உணர்த்தினார்கள். டாம் லாதம் [1], வில் யங் [1] இருவரையும் ஆண்டர்சன் அனுப்பி வைத்தார். டெவோன் கான்வோவை [3] பிராட் வெளியேற்றினார். கேன் வில்லியம்சன் [2], டேர்ல் மிட்ச்செல் [13], டாம் பிளன்ட்டல் [14] ஆகியோரை அறிமுக வீரர் போட்ஸ் பெவிலியன் அனுப்பி அசத்தினார். முதல் செசனில் 24 ஓவர்களில் 39 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்திருக்க, மதிய உணவு இடைவேளை விடப்பட்டத.
முதல் செசனின் முடிவுக்கு ஒரு ஓவருக்கு முன்னால் 23வது ஓவரில், மார்ச் 4 ஆம் தேதி தாய்லாந்தில் மாராடைப்பால் மரணமடைந்த லெஜன்ட் லெக்-ஸ்பின்னர் ஷேன் வார்னேவுக்கு 23 நொடிகள் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் ஜெர்சி எண் 23 என்பதால் இந்த முறையில் இரு அணி வீரர்களும் அஞ்சலி செலுத்தினர். ஆசஷ் தொடரில் இங்கிலாந்து அணியோடு 36 டெஸ்டுகளில் 195 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆசஷில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக ஷேன் வார்ன்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
This is great tribute by the authorities to Shane Warne, pausing the game for 23 seconds after 23rd over as his jersey number was 23. pic.twitter.com/HoexqD37MU
— Johns. (@CricCrazyJohns) June 2, 2022