நேற்று இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெல்லும் இடத்திலிருந்து கடைசியாக போட்டியை டை செய்தது. ஆனாலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இது முக்கியமான செயல்பாடாக அமைந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு தன்னுடைய பந்துவீச்சு திட்டம் என்னவென துனித் வெல்லாலகே கூறியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷாங்கா மட்டுமே துவக்க ஆட்டக்காரராக வந்து சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மற்றபடி மேல் வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் ரன்கள் எடுக்கவில்லை. இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் வெல்லாலகே 65 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து பந்துவீச்சுக்கு வந்த அவர் அதிலும் சிறப்பாக செயல்பட்டு 9 ஓவர்களுக்கு 37 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். முதலில் சுப்மன் கில்லை வெளியேற்றியவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மாவையும் வெளியேற்றி இந்திய அணிக்கு முதல் சரிவை ஏற்படுத்தினார். நேற்று இலங்கை அணியின் சிறப்பான போராட்டத்திற்கு முக்கிய கருதியாக விளங்கினார்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தன்னுடைய பந்துவீச்சு திட்டம் எப்படி இருந்தது? ரோகித் சர்மாவுக்கு எதிராக பந்துவீச்சில் எப்படியான திட்டத்தை உருவாக்கினார்கள்? என்பது குறித்து பேசி இருக்கிறார். மேலும் நேற்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய இவர்தான் ஆட்டநாயகன் விருதும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து துனித் வெல்லாலகே கூறும்பொழுது “ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது என்று எனக்கு தெரியும். மேலும் நான் பவர் பிளேவில் பந்து வீச வேண்டி இருக்கும் என கேப்டன் அசலங்கா என்னிடம் கூறினார். அந்த நேரத்தில் ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். ஆடுகளத்தில் சுழல் பந்து வீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு இருந்த காரணத்தினால், நான் ரோகித் சர்மாவுக்கு ஸ்டெம்ப் டு ஸ்டெம்ப்ட் வீச திட்டமிட்டேன், அது வேலை செய்தது.
இதையும் படிங்க : அடுத்த வாசிம் அக்ரம் வக்கார் யூனிஸ் இந்த இந்திய வீரர்தான்.. அவர் சொல்வதை பந்து கேட்கும்.. ரவி சாஸ்திரி பேட்டி
அதே சமயத்தில் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் நிறைய இருந்தார்கள். எனவே நாம் எந்த அளவிற்கு தவறுகளை குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு சிறப்பாக இருக்க முடியும் என்று தெரியும். மேலும் நான் பதும் நிஷாங்கா விளையாடுவதை பார்த்தேன். அவர் விளையாடும் முறையை மனதில் பதிந்து கொண்டேன். நீங்கள் ஆடுகளத்தை எடுத்துக் கொண்டால் சுழல் பந்துவீச்சுக்கு சிறப்பான முறையில் இருந்தது. எனவே நான் வந்து வீச்சாளர்கள் மேல் அழுத்தம் கொடுத்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சி செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.






