துலீப் டிராபி 2023… சிஎஸ்கே 19 வயது ஆல் ரவுண்டர் சதம் அடித்து அசத்தல்!

0
1307
Csk

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் டெஸ்ட் வடிவத்தில் துலீப் ட்ராபி டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாகும்!

கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலம் என மொத்தம் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 1961- 62 முதல் இந்த உள்நாட்டு டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த உள்நாட்டு டெஸ்ட் தொடரின் கால் இறுதி போட்டியில் வடக்கு மற்றும் வடகிழக்கு மண்டலங்கள் தற்போது மோதி வருகின்றன. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற வடகிழக்கு மண்டலம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்ய வந்த வடக்கு மண்டல துவக்க ஆட்டக்காரர் துருவ் சோரி மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 211 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

வடக்கு மண்டல அணிக்காக அடுத்து வந்த வீரர்கள் யாரும் 30 ரன்கள் தாண்டி எடுக்கவில்லை. அனுபவ வீரரான கேப்டன் ஜெயந்த் யாதவ் தான் சந்தித்த இரண்டாவது பந்திலையே ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆறாவது பேட்ஸ்மேனாக வந்த நிஷாந்த் சிந்து மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இவர் தற்பொழுது 171 பந்தில் 13 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். மொத்தம் 12 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் ஏற்கனவே சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலத்தில் 19 வயதான இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்துவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருந்தது. இவர் எதிர்காலத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெளிநாட்டு வீரரான மிட்சல் சான்ட்னர் இருவருக்குமே மாற்று வீரராக சென்னை அணியில் விளங்கக்கூடியவர்!

இவர் யாஸ் துல் தலைமையில் கடந்த அண்டர் 19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் மிக முக்கியமான வீரராக விளங்கினார். இளம் வயதிலேயே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பொறுப்பெடுத்துக் கொண்டு விளையாடும் பக்குவத்தோடு இருக்கும் சிறந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது!