7 பவுண்டரி 4 சிக்ஸ் 92 ரன்கள்; ஒத்தையா நின்று கெத்தாக ஜெயித்து கொடுத்த பாஃப் டு பிளஸ்சிஸ்!

0
1900

பாஃப் டு பிளஸ்சிஸ் அடித்த 92 ரன்கள், சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக ஜொகன்னஸ்பர்க் அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடரின் 27ஆவது போட்டியில் ஜொகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் ஆகிய இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

- Advertisement -

கேப்டன் டு பிளசிஸ் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி, முதல் விக்கெட்டிற்கு 119 ரன்கள் சேர்த்தனர். ஹென்ரிக்ஸ் 36 பந்துகளில் 40 ரன்கள் அடித்து பிரிடன் கார்ஸ் பந்தில் அவுட்டானார்.

அடுத்ததாக உள்ளே வந்த வீரர்கள் எவரும் நிலைக்கவில்லை. ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 19 ஓவர்கள் வரை களத்தில் நின்ற கேப்டன் டு பிளசிஸ் 61 பந்துகளில் 92 ரன்கள் அடித்தார் இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ஜொ-பர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு எய்டன் மார்க்ரம் மற்றும் சிசன்டா மகலா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

161 ரன்கள் இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு பவர்பிளே ஓவர்கள் சரியாக அமையவில்லை. 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்தது. 4வது விக்கெட்டுக்கு பவுமா மற்றும் மார்க்ரம் இருவரும் ஜோடி சேர்ந்து 59 ரன்கள் சேர்த்தனர்.

பவுமா 34 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மார்க்ரம் 30 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானபிறகு, சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட்டுகள் மீண்டும் சரியத்துவங்கின.

இறுதியாக, சன்ரைசர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜொ-பர்க் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கைல் சிம்மன்ஸ் 3 விக்கெட்டுகளும், ரோமரியோ செப்ர்ட், மஹீஷ் தீக்ஷனா, கோஎட்சீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில 22 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு முன்னேறியது. இப்போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் எவரும் 10 ரன்களை எட்ட முடியாத நிலையில், ஓபனிங் இறங்கி ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் டு பிளசிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.