“என்கிட்ட ஸ்வீப் விளையாட வேண்டாம்!”- ஆஸ்திரேலியாவுக்கு ஜடேஜா எச்சரிக்கை!

0
2706
Jadeja

கிரிக்கெட் உலகம் மிகவும் ஆவலாக எதிர்நோக்கி இருந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடரான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் தற்பொழுது பாதி முடிந்திருக்கிறது!

பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூரில் ஆரம்பித்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி எந்தவித சண்டையையும் செய்யாமல் இந்திய அணியிடம் மிக எளிமையாகச் சரணடைந்தது. பந்துவீச்சில் எட்டு விக்கெட், பேட்டிங்கில் நெருக்கடியான நேரத்தில் அபாரமாக செயல்பட்டு பெரிய அரை சதம் என மிகச் சிறப்பான பங்களிப்பை தந்து அந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார் ரவீந்திர ஜடேஜா. அந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அடித்த சதத்தை விட ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு மிகப்பெரியது!

- Advertisement -

இதற்கு அடுத்து பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மீண்டு வந்தது என்றே சொல்லலாம். பேட்டிங்கில் 263 ரன்களை முதலில் எடுத்து, இந்திய அணியின் ஏழு விக்கட்டுகளை 150 ரன்கள் முன்பாகவே வீழ்த்தியது. ஆனாலும் அக்சர் மற்றும் அஸ்வின் இருவரும் நூறு ரண்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவின் எழுச்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய அணி ஐம்பது ரண்களை நேற்று கடந்து மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. இந்தப் போட்டி நேற்றைய நாள் முடிவு வரை ஆஸ்திரேலியா கைகளில்தான் இருந்தது என்றே கூறலாம். இப்படியான நிலையில் இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியை தனது அபார பந்து வீச்சின் மூலம் 113 ரண்களுக்கு சுருள வைத்தார் ரவீந்திர ஜடேஜா. எஞ்சி இருந்த ஒன்பது விக்கட்டுகளில் ஆறு விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா இன்று தனக்கு எடுத்துக்கொண்டார். இந்திய முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பி கொண்டிருக்கும் நேரத்தில் ஆஸ்திரேலியா அணி இந்த ஆட்டத்தில் வெல்லத்தான் அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் ரவீந்திர ஜடேஜா அதற்கு ஆஸ்திரேலியா அணியை விடவில்லை!

காயத்திற்கு பின் மீண்டும் வந்த ஜடேஜா சிறப்பாக செயல்படுவாரா அவரது பழைய திறமையில் இருப்பாரா என்கின்ற எல்லா சந்தேகத்திற்கும் அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் பதில் அளித்து விட்டார். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் கொஞ்சம் மேலே போய் பந்துவீச்சில் தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி 42 ரன்களுக்கு 7 விக்கெட்டை வீழ்த்தி, இரண்டாவது முறையாக இந்தப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்று, தான் எந்த காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இருக்கிறேன் என்பதை காட்டி இருக்கிறார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருதை வென்ற ரவீந்திர ஜடேஜா பேசும் பொழுது ” நான் எனது பந்துவீச்சை ரசிக்கிறேன். சில பந்துகள் சுழலும் சில பந்துகள் தாழ்வாக செல்லும். இப்படியான ஆடுகளங்கள் எனக்கானது. அவர்கள் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். எனவே எனது பந்துவீச்சை எளிமையாக நேராக வைத்துக் கொண்டேன். அவர்கள் எப்படியும் ரன்கள் அடிப்பதற்கே போவார்கள் என்று தெரிந்த காரணத்தால் எனது எல்லா பந்துகளையும் ஸ்டெம்ப் நோக்கி மட்டுமே வீசினேன். அவர்கள் ஒரு தவறு செய்தால் அவர்களை வீழ்த்த இதில் எனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. இந்த மாதிரியான ஆடுகளத்தில் எனக்கு எதிராக ஸ்வீப் விளையாடுவது ஒரு நல்ல வழி என்று நினைக்கவே வேண்டாம் ” என்று நகைச்சுவையாக ஆஸ்திரேலியர்களுக்கு செய்தி சொல்லி இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா!