யாருக்காகவும் எதையும் நான் நிரூபிக்க வேண்டியதில்லை – ஷுப்மன் கில் அதிரடிப் பேச்சு

0
81
Shubman Gill

இந்திய அணியின் எதிர்கால வீரர்களில் ஒருவராகப் பார்க்கப்படுவர் சுப்மன் கில். “இவரது வயதில் நான் இந்தளவிற்குப் பந்துகளைச் சிறப்பாக விளையாடியதில்லை” என்று கூறுமளவிற்குச் சிறப்பு பேட்டிங் திறமையோடு விளங்கக்கூடியவர் 22 வயதான இந்த பஞ்சாப் வீரர்!

2016ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான இவர், அடுத்த 2017ஆம் ஆண்டு ரஞ்சி போட்டியிலும் பஞ்சாப் அணிக்கான அறிமுகம் ஆனார். 2018ஆம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையில் அன்டர் 19 உலகக்கோப்பையை கைப்பற்றிய தொடரில், பேட்டிங்கில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி 418 ரன்களை 104.50 சராசரியில் விளாசி இருந்தார். இதே ஆண்டில் கொல்கத்தா அணி இவரை 1.80 கோடிக்கு வாங்கியது. இவரது தொடர்ச்சியான சிறப்பான பேட்டிங் செயல்பாடுகளால் 2019ஆம் ஆண்டு இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். தற்போது இவர் இந்த வருடம் குஜராத் அணியால் வாங்கப்பட்டு, ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தி சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் 15 ஆட்டங்களில் 438 ரன்களை குவித்திருக்கிறார்.

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இருபது ஓவர்களில் ஜோஸ் பட்லரின் அதிரடியான 56 பந்துகளில் 89 ரன்களால் 188 ரன்களை குவித்தது. பின்பு குஜராத் அணி முதல் ஓவரிலேயே சஹாவை இழந்தாலும், அடுத்து சுப்மன் கில், மேத்யூ வேட் ஜோடி 72 ரன்கள் பார்ட்னர் ஷிப்பை அமைத்தது. துரதிருஷ்டவசமாக சுப்மன் கில் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். பின்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் 40 ரன்களையும், டேவிட் மில்லர் 38 பந்துகளில் 68 ரன்களையும் விளாச, 19.3 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து குஜராத் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இப்போட்டிக் குறித்துப் பேசியுள்ள குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் “என் மீது எந்த அழுத்தமும் இல்லை. ஏனென்றால் கடந்த முறை விளையாடிய கொல்கத்தா அணிக்கும் சிறப்பாகவே விளையாடினேன். இந்த ஆடுகளத்தில் பந்து சுலபமாய் வருமென்று நினைத்தோம் ஆனால் பந்து ஒட்டி நின்று வந்தது. சஹாவை துவக்கத்திலேயே இழந்திருந்தாலும் பவர்ப்ளேவில் நல்ல ரன்களை கொண்டு வந்தோம். அரையிறுதியில் வென்றதும், அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்ப்பதும் அற்புதமானது. நான் எதற்காகவும் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. நான் அணிக்குப் பங்களிக்க வேண்டும். சிறப்பாகச் செயல்பட வேண்டும் அவ்வளவுதான். இந்த இரவு எங்களுக்கானதாய் அமைந்திருக்கிறது. இறுதி போட்டிக்குச் சென்றது மகிழ்ச்சியானது” என்று கூறியிருக்கிறார்!