இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த துவக்க ஜோடி சச்சின் டெண்டுல்கர் சௌரவ் கங்குலி ஜோடிதான். இந்த ஜோடிக்கு பிறகு அவர்களது காலத்திலேயே சச்சின் டெண்டுல்கர் வீரேந்திர சேவாக் ஜோடி அமைந்தது. இதற்குப் பிறகு சில காலம் இந்திய அணிக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சரியான துவக்க ஜோடி அமையவில்லை.
இந்த நிலையில்தான் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இடது கை வீரர் ஷிகர் தவானோடு வலது கை வீரர் ரோகித் சர்மாவை துவக்க வீரராக களம் இறக்கினார் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரது இந்த முடிவு அதற்கடுத்த ஒரு தசாப்தத்திற்கு இந்திய அணிக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய நன்மைகளை வழங்கியிருக்கிறது.
ஷிகர் தவான் ரோகித் சர்மா ஜோடி தற்போது பத்தாம் ஆண்டு தொடங்கி மேலும் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கும் இந்திய அணியின் துவக்க ஜோடி இவர்கள்தான்.
இந்த ஜோடி அதிக ரன் குவித்த துவக்க ஜோடி பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் இந்த ஜோடி 5000 ரன்களை கடந்தது. தற்போது இந்த ஜோடி 112 ஆட்டங்களில் 5108 ரன்களை குவித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நூத்தி முப்பத்தி ஆறு ஆட்டங்களில் 6609 ரன்களை குவித்த சச்சின் கங்குலி ஜோடி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹைடன்- கில்கிரிஸ்ட் ஜோடி 114 ஆட்டங்களில் 5372 ரன்கள் எடுத்து இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸின் கிரினிஜ்- கெயின்ஸ் ஜோடி இரண்டு போட்டிகளில் 5150 ரன்களை எடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
தற்போது ஷிகர் தவான் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை பற்றியும் தன்னுடைய துவக்க ஜோடியான ரோகித் சர்மா பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். ஒருநாள் போட்டிகளையும் ஒருநாள் போட்டி ஐசிசி உலகக் கோப்பையையும் மிகவும் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி ஷிகர் தவான் கூறும் பொழுது ” ரோகித் சர்மா ஒரு அருமையான துவக்க ஆட்டக்கார கூட்டாளி. அவருடன் சேர்ந்து பேட் செய்வது மிகவும் மகிழ்ச்சியான உணர்வைத் தரக்கூடியது. எங்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பு மற்றும் நட்பு உள்ளது. விளையாட்டைப் பற்றி நாங்கள் இருவரும் நிறைய புரிந்து கொள்கிறோம். நான் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்னுடைய மொத்த கவனமும் இதில்தான் இருக்கிறது. ஐசிசி நடத்தும் தொடர்களை நான் எப்போதும் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்!