இந்திய அணியின் நட்சத்திர வீரரும் தன்னுடைய நண்பருமான விராட் கோலி யாரிடமும் தன்னை நிரூபிக்க தேவையில்லை என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 52 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் சதத்தை அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் ஒரு கிரிக்கெட் வடிவத்தில் அதிக சதங்கள் அடித்தவராக இனி யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்திருக்கிறார்.
விராட் கோலி நிரூபிக்க வேண்டியது இல்லை
இதுகுறித்து பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “விராட் கோலி நம்மிடம் எல்லாம் நிரூபிப்பதற்கு எதுவுமே கிடையாது. ரன் எடுப்பதை ஒரு கலை வடிவமாக மாற்றிய வீரரை பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும். ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டும் 52 சதங்கள். ஒரு வடிவத்தில் அதிக சதம் அடித்தவராக யாராலும் செய்ய முடியாத சாதனையை செய்திருக்கிறார்”
“அந்த ஒழுக்கம் மற்றும் விளையாடுவதற்கான பசி மேலும் உடல் தகுதி மீது இருக்கும் அவரது அயராத ஆர்வம், இன்று அவரை நீங்கள் காணக்கூடிய விதத்தில் இருக்கிறது. நேற்று அவர் உள்ளே வந்து விளையாடிய விதம் மற்றும் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக அவரது கால் நகரும் வேகம், அவர் ஒரு ரன்னை இரண்டு ரன்னாக மாற்றிய சுறுசுறுப்பு ஆச்சரியமான விஷயம்”
அவர் ஒரு பாடம்
“விராட் கோலி பேட்டிங் செய்யும் ஒவ்வொரு போட்டியும் அது பாடமாக இருக்கிறது. ஒரு தலைமுறையில் ஒரு முறை மட்டுமே வீரரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் சிறந்த சாதனைகளை விராட் கோலி துரத்துவதற்கு எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க : கம்பீரிடம் விராட் ரோகித்துக்கு உறவு சரியில்லை.. பதட்டமடையும் பிசிசிஐ – வெளியான முக்கிய செய்தி
“இந்த விளையாட்டில் அவர் ஜாம்பவான் என்றால் அதற்கு எப்படி அவர் தகுதியானவராக இருக்கிறார் என்று காட்டுகிறார். நேற்று அவருடைய சிறந்த பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்ந்திருக்கிறது. அவர் இன்னும் உயர்வும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெல்லவும் வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






