இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவில் தான் விளையாடிய அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துகளை தினேஷ் கார்த்திக் பகிர்ந்திருக்கிறார்.
எஸ்ஏ டி20 லீக்கில் தினேஷ் கார்த்திக்
இந்திய முன்னாள் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பார்ல் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தமாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் மற்றொரு உரிமையான இந்த அணியில் தினேஷ் கார்த்திக் தனது முதல் போட்டியில் இன்று விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடர் போன்று தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடர் மக்களிடையே தற்போது பெரிய அளவில் புகழ்பெற்று வருகிறது. அதில் தினேஷ் கார்த்திக் இன்று முதல் போட்டியில் விளையாட இருந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். மேலும் 2007ஆம் ஆண்டு இந்திய அணியை டி20 உலக கோப்பையை வென்றதன் முன்னோட்டமே இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உத்வேகமாக அமைந்தது என்று கூறியிருக்கிறார்.
ஐபிஎல் ஆரம்பிக்க இந்த விஷயம் தான் காரணம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தென்னாப்பிரிக்காவை பொருத்தவரை எப்போதுமே எனது கிரிக்கெட் வாழ்க்கை நன்றாக அமைந்திருக்கிறது. இது எனது கிரிக்கெட்டை உண்மையிலேயே ஆதரித்த இடமாகும். நான் இங்கு விளையாடுவதை மிகவும் ரசித்திருக்கிறேன். எனது சிறப்பான நினைவுகளில் எப்போதுமே தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கும். ஏனென்றால் என்னுடைய சிறந்த நினைவுகளில் சில இங்கிருந்து வந்தவைதான்.
இதையும் படிங்க:64 பந்து 121 ரன்.. எனக்கு வயசு ஆயிடுச்சு.. அதான் செலக்டர்ஸ் என்னை கண்டுக்க மாட்டேங்குறாங்க – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
உதாரணமாக இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது ஒரு சிறப்புமிக்க பகுதியாகும். இது இந்திய கிரிக்கெட்டில் டி20 தொடர் பரவுவதற்கு ஒரு மிகப்பெரிய முன்னோடியாக அமைந்தது அது தற்போது ஐபிஎல் என்று அழைக்கப்படுகிறது” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற பிறகு தான் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் என்னும் டி20 கிரிக்கெட் லீக் தொடர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.