நவீன கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழும் இந்தியாவின் விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக பல சாதனைகளைப் படைத்துள்ள வீரராக இருக்கிறார். டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் ஆர்சிபி வீரருமான தினேஷ் கார்த்திக் விராட் கோலியால் 100 சதங்கள் அடிக்க முடியுமா? என்பது குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
விராட் கோலி தனது பேட்டிங்கின் மூலம் இந்திய கிரிக்கெட்டில் ஏராளமான ரன்களை குவித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இதுவரை 530 சர்வதேச போட்டிகளில் விளையாடி 26884 ரன்களை குவித்து சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதில் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34357 சர்வதேச ரன்களை குவித்திருக்கிறார்.
டெண்டுல்கர் இதுவரை 100 சதங்களும், 164 அரை சதங்களும் அடித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 80 சதங்களும் 140 அரை சதங்களும் அடித்திருக்கிறார். ஆனால் இதில் குறிப்பாக விராட் கோலி வருடத்திற்கு இரண்டு மாதங்கள் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அந்த ஐபிஎல் கிரிக்கெட் தவிர்த்து ஆண்டு முழுவதும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி இருந்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்நேரம் நெருங்கி வந்திருப்பார்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் விராட் கோலியால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக் “அவர் இதுவரை 80 சதங்கள் அடித்திருக்கிறார். இன்னமும் 20 சதங்கள் மட்டுமே தேவை. ஆனால் அதற்கு அவர் குறைந்தது நான்கு ஆண்டுகள் இன்னும் கிரிக்கெட் விளையாட வேண்டும். விராட் கோலி அடுத்து நடைபெற உள்ள 2027 உலக கோப்பை வரை நிச்சயமாக விளையாடுவார். அதனால் ஏன் முடியாது? இந்த சாதனையைப் படைக்க அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ரோகித் விரும்பிய அது நடக்கல.. ஆனா இனி இந்த விஷயத்துல அவர் படையை தடுக்க முடியாது – தினேஷ் கார்த்திக் பேச்சு
தற்போது டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதால் விராட் கோலி இனி நிதானமாக டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவார். இதனால் தினேஷ் கார்த்திக் கூறியது போல அவர் இந்த சாதனையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.






