தற்போது இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் கம்பீரின் சகாப்தம் உருவாகி இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2 1/2 நாட்கள் மழையில் பாதிக்கப்பட்ட பொழுதும் இந்திய அணி ஒரு செஷன் முழுமையாக வைத்து வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.
235 ஓவர்கள் இழப்பு
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மழையின் காரணமாக 235 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இப்படியான நிலையில் டெஸ்ட் போட்டியை வென்றது மட்டுமல்லாமல், கடைசி நாளில் ஒரு செஷனை மீறி வைத்து வென்றது கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணி பேட்டிங்கில் 34.4 ஓவரில் 285 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா எடுத்ததும் மூன்று சிக்ஸர்கள் உடன் அதை ஆரம்பித்து வைத்தார். பிறகு ஜெய்ஸ்வால் அதை சிறப்பாக எடுத்துச் சென்றார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் தங்களுடைய பேட்டிங் பாணிக்கு மாறாக விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் மிக அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
ரோகித் சர்மா கம்பீர் எரா ஆரம்பித்திருக்கிறது
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” இந்திய அணி அதிரடியாக விளையாட வேண்டும் என ரோகித் சர்மா மற்றும் கம்பீர் முடிவெடுத்த பொழுது அது சில இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அசௌரியத்தை உருவாக்கியது. அந்த பேட்ஸ்மேன்கள் தங்களுடைய கம்போர்ட் ஜோனிலிருந்து வெளியில் வந்து விளையாட வேண்டி இருந்தது. இதுதான் ரோகித் சர்மா கம்பீர் சகாப்தத்தை உருவாக்கப் போகிறது. வீரர்களை அவர்களுடைய கம்போர்ட் ஜோனிலிருந்து வெளியே தள்ளும் பொழுது தான் விரும்பிய முடிவுகளை பெற முடியும்”
இதையும் படிங்க : பங்களாதேஷ் பேட்ஸ்மேன்ஸ்.. இந்தியனா சொல்றேன் ஆடாம வெளிய போங்க – கவாஸ்கர் விமர்சனம்
“இந்த டெஸ்ட் போட்டி உண்மையில் வியக்க வைக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்பு இது போன்ற ஒரு முன்னோடி போட்டி எதுவும் நடக்கவில்லை. இரண்டு நாட்கள் முழுவதும் போட்டி கைவிடப்பட்ட நிலையில் 45 ஓவர்கள் மீதம் வைத்து வெல்வது அசாதாரணமானது. இது ரோகித் சர்மா மற்றும் கம்பீர் கூட்டணியில் மிக மிக சிறப்பான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.