தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் விளையாட எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.
இதில் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குழுவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடப் போகும் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, நான்காவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றது. லீக் போட்டிகளை அமெரிக்காவில் விளையாடிய இந்திய அணி அடுத்த சுற்று போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விளையாட உள்ளது.
அமெரிக்க ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை எடுத்த இந்திய அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணியைத் தவிர ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தியாவிற்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணி இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதில் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆப்கானிஸ்தான் அணியில் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் முதல் போட்டி இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்பின்னர்களுக்கும் ஒரு பெரிய போராக இருக்கும் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
இந்தப் போட்டி குறித்து தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்பொழுது
” நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இந்தியா பெரும்பாலான போட்டிகளை அமெரிக்காவில் காலை நேரத்தில் விளையாடியது. அது இந்தியாவில் இரவு நேரம் ஆகும். மேலும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகாலங்களிலும் அதே சூழ்நிலை நிலவுவதால் பகல் நேர ஆட்டத்திற்கு கூடுதல் ரிஸ்ட் ஸ்பின்னர் எடுப்பது நன்மை தரும். ஆனால் அதே சமயம் இந்த நேரத்தில் பேட்டிங் செய்ய கடினமான ஒன்றாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:கம்பீர் பயிற்சியாளர்.. ரோகித் கோலி எதிர்காலம் அவ்வளவுதானா?.. 2024 டு 2027 சவால்கள் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
இது குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமான ஒரு விஷயம். ஏனெனில் அவர்களது உலக தரத்திலான சுழற் பந்துவீச்சாளர்கள் உலகின் வேறு எந்த மைதானங்களில் விளையாடுவதை காட்டிலும், இந்த மைதானங்களில் அவர்களின் தாக்கம் அதிகமானதாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானவை. எனவே நாம் ஆப்கானிஸ்தான் அணிக்கும் சரியான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் ஏற்க வேண்டும். மொத்தத்தில் இது இந்தியாவின் பேட்டிங்க்கும், ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையிலான போட்டி” என்று கூறி இருக்கிறார்.