நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் திண்டுக்கல் அணி திருப்பூர் தமிழன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி எளிதில் வெற்றி பெற வைத்திருக்கிறார்.
இதன் மூலம் டிஎன்பிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.
நடப்பு டிஎன்பிஎல் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது குவாலிஃபயர் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் குவாலிபயர் போட்டியில் கோவை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி திருப்பூர் தமிழன் அணியை 19.4 ஓவரில் 108 ரன்களுக்கு மடக்கியது. இதில் அதிகபட்சமாக மான் பப்னா 26 ரன்கள் குவித்தார். இதில் பந்துவீச்சை பொறுத்தவரை திண்டுக்கல் அணியின் விக்னேஷ் நான்கு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் ஐபிஎல் நட்சத்திரம் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களம் இறங்கியது. திண்டுக்கல் அணியில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த முறை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். விமல் குமார் ஒரு முனையில் நிதானமாக விளையாட மற்ற முனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
30 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அஸ்வின் 11 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 230 ஸ்ட்ரைக் ரைட்டில் 69 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்திய அணியில் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய அஸ்வின் டிஎன்பிஎல் தொடரில் இவரது அதிரடியான பேட்டிங் அனைவரையும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.
இதையும் படிங்க:14 பந்துக்கு 1 ரன்.. செம்ம ஏமாற்றம்.. உங்க இஷ்டத்துக்கு இங்க வந்து விளையாட முடியாது – ரோகித் சர்மா பேட்டி
அதுவும் புவனேஸ்வரின் 11 வது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விளாசி திண்டுக்கல் அணியை 11 ஓவர்களிலேயே 112 ரன்கள் குவித்து அஸ்வின் வெற்றி பெற வைத்தார். இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெற்றுள்ள திண்டுக்கல் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.






