யார் இந்த மும்பையின் ஹீரோ ஆகாஷ் மத்வால்? ஆர்சிபி தவறவிட்ட சொக்க தங்கம்

0
1222

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு புதிய சூப்பர் ஹீரோவை கண்டுபிடித்துள்ளது.  லக்னோக்கு எதிராக வாழ்வா சாவா போட்டியில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால், வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் 101 ரன்களில் லக்னோவை சுருட்டி மும்பை இந்தியன்ஸ் அணி, அவர்களுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இவ்வளவு ஆக்கோரஷமாக பந்துவீசும் ஆகாஷ் மத்வாலுக்கு வயது 29 ஆகிறது. இதனால், இவ்வளவு நாளாக எங்கே இருந்தார் மத்வால் என்று ரசிகர்கள் அனைவரும் தேடி வருகின்றனர்.

- Advertisement -

பொறியியல் பட்டதாரியான ஆகாஷ் மத்வால், கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் டென்னிஸ் பந்தில் விளையாடி வந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ரிஷப் பந்தின் சொந்த ஊர் தான் இவருக்கும் என்பது ஆச்சரிய தகவல். பந்தின் அறிவுரை அடுத்து இவர் தொழில் முறை கிரிக்கெட்டிற்கு அடி எடுத்து வைத்திருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சையது முஸ்தாக் அலி தொடரில் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். தனது ஆக்ரோஷ வேகத்தால் ரஞ்சிப் போட்டியிடும் அதே ஆண்டு ஆகாஷ் மத்வால் விளையாடி இருக்கிறார். அப்படி இருந்தும் இவர் ஐபிஎல் தொடரில் இவ்வளவு தாமதமாக அறிமுகமானதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அது வேறு யாரும் இல்லை நமது ஆர் சி பி அணி தான்.கே ஜி எஃப், கோலார் தங்கம் என பேசும் ஆர் சி பி அணி ஒரு தங்கத்தை கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தது தற்போது அம்பலமாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர் சி பி அணி நிர்வாகிகள் ஆகாஷ் மத்வாலை கண்டுபிடித்து அவரை தங்களது அணியின் நெட் பவுலராக பயன்படுத்தி இருந்தார்கள். அவருடைய ஆக்ரோஷமான வேகம் அந்த அணி வீரர்களை கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

ஆனால் ஏலத்தில் ஆகாஷ் மத்வாலை ஆர் சி பி அணி எடுக்கவே இல்லை. இதேபோன்று மும்பை அணியும் ஆகாஷ் மத்வாலை நெட் பவுலராக 2022 ஆம் ஆண்டு பயன்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சீசனில் சூரியகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டு இரண்டு போட்டிகளில் விளையாட வில்லை. அந்த நேரத்தில் தான் ஆகாஷ் மத்வாலை மும்பை அணி 20 லட்சம் கொடுத்து மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது.

இதேபோன்று நடப்பு சீசனிலும் முதலில் அர்ஜுன் டெண்டுல்கர் தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பாதி லீக் போட்டிகளுக்கு பிறகு தான் ஆகாஷ் மத்வால் தனது முதல் போட்டியிலே விளையாடியிருக்கிறார். தீவிர பயிற்சி, நம்பிக்கை கிரிக்கெட் மீதான காதல் ஆகியவை மட்டும்தான் தமது வெற்றிக்கு காரணம் என நேற்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ஆர் சி பி அணி இந்த வீரரை ஏன் விட்டது என்று அந்த அணியின் ரசிகர்கள் தற்போது பொளந்து வருகின்றனர். இப்படிப்பட்ட வீரர்களை எல்லாம் தேர்வு செய்யாமல் விட்டால் ஆர் சி பி அணி எந்த காலத்திலும் ஐபிஎல் கோப்பையை வாங்காது என்று பலரும் சாபம் விட்டு வருகின்றனர்.