“கோலிதான் என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு கட்டியதாக நான் சொன்னேனா?” – விளக்கம் கொடுத்த ஜாகீர் கான்!

0
432
Zaheer

இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சுத் துறையில் இந்திய முன்னாள் இடது கை வேகபந்துவீச்சாளர் ஜாகீர் கானுக்கு என்று ஒரு தனி இடம் எப்பொழுதும் இருக்கும்.

சவுரவ் கங்குலி கேப்டன்சி காலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகத் திறமையான வேகப்பந்துவீச்சாளராக இன்றளவும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஜாகிர் கான் அடையாளம் காணப்படுகிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் இவர் ஓய்வு பெற்ற பிறகு இதுவரை இவரது இடத்தை நிரப்பும் வகையில், ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த முதல் மற்றும் கடைசி இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான்தான்.

வேகப்பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்விங் என்னும் கலையில் கை தேர்ந்தவர் ஜாகிர் கான். ஸ்விங் கிங் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் சாதனை வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் ரிவர்ஸ் ஸ்விங் கலையை எடுத்துக் கொண்டது ஜாகீர் கான் இடம் இருந்துதான். அந்த அளவிற்கு மிகவும் திறமையான புத்திசாலித்தனமான வேகப்பந்துவீச்சாளர்.

இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மழையின் காரணமாக டிராவில் முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இஷாந்த் சர்மா விராட் கோலிக்கும் ஜாகீர் கானுக்கும் இடையே 2014 நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். அதே நிகழ்வில் ஜாகீர் கானும் இருந்தார். அப்பொழுது அவர் இஷாந்த் சர்மா கூறியதில் தலையிட்டு திருத்தி என்ன நடந்தது? என்று கூறினார்.

- Advertisement -

முதலில் இஷாந்த் சர்மா கூறும் பொழுது
“நாங்கள் நியூசிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்தப் போட்டியில் மெக்கலம் 300 ரன்கள் எடுத்தார். ஆனால் விராட் கோலி ஆரம்பத்திலேயே அவருக்கு ஒரு கேட்சை தவறவிட்டிருந்தார்.

எனக்கு அப்பொழுது மதிய உணவு இடைவேளையின் போது என்ன நடந்தது என்று நினைவிருக்கிறது. அப்பொழுது ஜாகீர் கான் இடம் விராட் கோலி ‘மன்னிக்கவும் ஜாக் அவரை நாம் சீக்கிரத்தில் வெளியேற்றுவோம்’ என்று கூறினார். இதையே திரும்ப தேநீர் இடைவேளையின் போதும் கூறினார். அதற்கு ஜாகிர் கான் இது சம்பந்தமாக மேலும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

ஆனால் மூன்றாம் நாள் மீண்டும் தேநீர் இடைவேளையின் போது விராட் கோலி ஜாகீர் கான் இடம் மன்னிப்பு கேட்க அதற்கு ஜாகீர் கான் ‘நீங்கள் என் வாழ்க்கையை முடித்து விட்டீர்கள்” என்று விராட் கோலி இடம் கூறினார்” என்று தெரிவித்தார்.

இஷாந்த் சர்மா இப்படி கூற இடைமறித்த ஜாகீர் கான் என்ன நடந்தது என்று விளக்கினார். ஜாகீர் கான் கூறுகையில்
“நான் அப்படிச் சொல்லவில்லை. நான் என்ன சொன்னேன்? என்றால், கிரண் மோரே கிரகாம் கூச்சுக்கு ஒரு கேட்ச்சை தவற விட அவர் 300 ரன்கள் எடுத்தார், அதேபோல இப்ப நீங்கள் தவற விட்டு இவர் 300 ரன்கள் எடுத்திருக்கிறார். இப்படி இரண்டு முறைதான் நடந்திருக்கிறது என்று சொன்னேன்.

இதைக் கேட்ட விராட் கோலி அந்த மாதிரி சொல்ல வேண்டாம் என்று என்னிடம் சொன்னார். உண்மையிலேயே அவர் அந்த சூழ்நிலையை நல்ல விதமாக உணரவில்லை. அவர் கேட்ச் விட்ட பிறகு நிறைய ரன்கள் எடுக்கப்பட்டது!” என்று கூறினார்.

2014 இல் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் கை ஓங்கி இருக்க, விராட் கோலி மெக்கலமுக்கு கேட்ச்சை தவற விட்டு அவர் முச்சதம் அடிக்க, இறுதியாக ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இறுதியாக ஜாகீர்கான் மெக்கலமை வீழ்த்தியதோடு ஐந்து விக்கட்டுகளையும் கைப்பற்றினார்.