இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ராஞ்சி மைதானத்தில் இந்திய அணி தடுமாறி வந்தாலுமே, இளம் வீரர்கள் காட்டக்கூடிய கேரக்டர் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.
நேற்று முன்தினம் துவங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் சதத்தால் 353 ரன்கள் குவித்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் நேற்று ஏழு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. களத்தில் துருவ் ஜுரல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இருந்தார்கள்.
இன்று இருவரும் தொடர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை மிகச் சிறப்பாக சமாளித்து விளையாடினார்கள். எங்கிருந்து ரெண்டு கிடைத்தாலும் இந்த ஜோடி அதை எடுத்துக் கொண்டது.
இறுதியாக மிகச் சிறப்பாக விளையாடிய குல்தீப் யாதவ் 131 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் துருவ் ஜுரல் முதல் போட்டியில் தனது முதல் அரை சதத்தை நெருங்கி தவற விட்டிருந்தார். ஆனால் இந்த முறை பொறுப்பாக விளையாடி, இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது, சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை அடித்தார்.
துருவ் ஜுரல் அடித்த இந்த அரைசதத்தின் மதிப்பு மிகப்பெரியது. எனவே ஒட்டுமொத்த இந்திய அணியும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்று மரியாதை செய்தது. அதை அவர் சல்யூட் செய்து ஏற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க : ஐபிஎல்-க்கு 30 நாள்.. ராஜஸ்தான் ராயல்ஸ் சொந்த மைதானத்துக்கு சீல் வைப்பு.. என்ன நடந்தது?
மேலும் மகேந்திர சிங் தோனியின் சொந்த மைதானத்தில், அவருடைய தீவிர ரசிகரான துருவ் ஜூரல் முதல் அரை சதத்தை அடித்திருக்கிறார். இருவருமே விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.