“தோனி சொன்னார்.. இந்தியா இப்பவே ஒரு போட்டியில் தோக்கறது நல்லது!” – ரவி சாஸ்திரி வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!

0
4584
Dhoni

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தரம்சாலா மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கான இடத்தை ஏறக்குறைய உறுதி செய்யும் என்கின்ற வகையில் முக்கியமான ஆட்டமாக இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாக்கூர் இடம் பெறவில்லை. இவர்களது இடத்தில் சூரியகுமார் மற்றும் முகமது சமி இருவரும் விளையாடுகிறார்கள்.

நியூசிலாந்து அணி பொறுத்த வரை காயம் அடைந்துள்ள கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த போட்டிக்கும் திரும்பவில்லை. அவர்கள் கடைசியாக விளையாடிய அதே அணியை கொண்டு இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இரண்டு அணிகளும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி இதுவரை ஒரு தோல்வியை கூட பெறவில்லை. இன்றைய போட்டியில் எந்த அணி தோற்கிறதோ அதுவே அவர்களுக்கு முதல் தோல்வியாக இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் லீக் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் தோற்பது நல்ல விஷயம் என்று முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளதாக ரவி சாஸ்திரி ஒரு முக்கிய விஷயத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி ஒரு லீக் போட்டியில் தோற்றது. ஆனால் அதே அணி உலக கோப்பையை வென்றது. தற்பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசும்பொழுது, எனக்கு மகேந்திர சிங் தோனி அப்பொழுது கூறியது ஞாபகத்துக்கு வருகிறது.

அப்பொழுது தோனி ‘லீக் சுற்றில் ஒரு போட்டியில் தோற்பது நல்ல விஷயம்தான். ஏனென்றால் அரைஇறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அப்படியான ஒரு நிலை வரும் பொழுது நன்றாக இருக்காது. நான் திடீரென்று அதில் சிக்கிக் கொண்டு பதட்டம் அடையக் கூடாது. முன்கூட்டியே அந்த விஷயம் நமக்கு பழகி இருக்க வேண்டும்!’ என்று கூறியிருந்தார். எனவே இன்று தோல்வி வந்தாலும் பிரச்சனை கிடையாது என்று கூறியிருக்கிறார்!