டெல்லி அணிக்கு எதிராக நான் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி தோனியின் அறிவுரை தான் உதவியது – டெவோன் கான்வே பேச்சு

0
50
MS Dhoni and Devon Conway

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர்களுக்கு பெயர் போனது. கடந்த 15 ஆண்டுகளாக ஏலத்தில் ஓர் வெளிநாட்டு தொடக்க வீரரை வாங்குவது தான் சென்னை அணியின் திட்டமாக இருந்து வருகிறது. ஹைடன், மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், டுவெய்ன் ஸ்மித், ஃபாப் டு பிளசிஸ் ஆகியோர் அணிக்கு பங்காற்றினர். அவர்களின் இடத்தை இந்த ஆண்டு நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே நிரப்புகிறார். கடந்த 3 போட்டிகளில் ருத்துராஜ் கெய்க்வாட் – கான்வே ஜோடி தொடர்ச்சியாக மூன்று 50+ ஸ்கோர் அடித்தனர். அதில் 2 பார்ட்னர்ஷிப் 100 ரன்களுக்கு மேல்.

சென்ற ஆண்டு டு பிளசிஸ் மற்றும் கெய்க்வாட் இணைந்து அதிரடி காட்டுவது போல இம்முறை இவர்கள் அடிக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர்களை இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் பார்த்துக் கொள்கிறார். மறுபக்கம் டெவோன் கான்வே ஸ்பின்னர்களை அடித்து துவம்சம் செய்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரையும் சேர்த்து 20 பந்தில் 54 ரன்கள் விளாசினார்.

எப்போதும் ஸ்வீப் ஷாட்டை விரும்பி ஆடும் கான்வே, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதைத் தவிர்த்தார். அவரது டெக்னிக்கில் வித்தியாசம் தெரிந்தது. ஆட்ட நாயகன் விருது வென்றப் பின் அது குறித்து அவர் பேசினார். “ முதலில் நான் எம்.எஸ்.தோனிக்கு நன்றி சொல்ல வேண்டும். சென்ற போட்டியில் நான் நிறைய ஸ்வீப் ஷாட்டுகள் ஆடினேன். அதனால் ஒரு கட்டத்தில் என்னுடைய விக்கட்டையும் இழந்து பெவிலியன் திரும்ப நேரிட்டது. கேப்டன் தோனி என்னிடம் வந்து, ‘ அவர்கள் உனக்கு புல்லர் பந்து வீசப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன். அதனால் வெளியே இறங்கி நேராக அடிக்க முயற்சி செய் ‘ என்றார். அவர் சொன்னதை நான் அப்படியே செய்தேன். ” என்றார் டெவோன் கான்வே.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான அப்போட்டியில் கான்வே, 49 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 87 ரன்கள் சேர்த்து சென்னை அணியை 208 எனும் இமாலய இலக்கை அடைய உதவினார். 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெற்று இன்னும் பிளே ஆப் ஓட்டத்தில் இருப்பதை உறுதி செய்தது.