மின்வெட்டு காரணமாக டி.ஆர்.எஸ் இல்லை ; நாட் அவுட் அறிவிக்கப்பட வேண்டிய பந்திற்கு ஆட்டமிழந்த கான்வே – வீடியோ இணைப்பு

0
886
Devon Conway wicket

இன்று ஐ.பி.எல்-ன் எல்-கிளாசிக்கோ போட்டி சென்னை மும்பை அணிகளுக்கு இடையே, மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை அணி முழுதாகவே ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது. சென்னை அணி நூலிழை அளவு ப்ளேஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி சென்னை மும்பை மோதிக்கொள்ளும் போட்டிக்கான பரபரப்பும் திருப்பங்களும் இந்தப் போட்டியின் டாஸின் போதே ஆரம்பித்துவிட்டது.

மைதானத்தில் பவர்கட் பிரச்சினை இருந்ததால் டாஸ் போடுவதே சற்று தாமதமாகத்தான் ஆரம்பித்தது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியில் பொலார்டின் பிறந்த நாளான இன்று பொலார்டால் இடம் பெற முடியவில்லை. செளத்ஆப்பிரிக்க இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம்பெற்றார். அஷ்வின் முருகன் நீக்கப்பட்டு ஹிர்திக் உள்ளே வந்திருந்தார். சென்னை அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

சென்னை அணிக்கு பேட்டிங்கை துவங்க ருதுராஜ்-கான்வோ ஜோடி களம் புகுந்தது. முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீச, முதல் பந்தில் ருதுராஜ் சிங்கிள் ஆட, இரண்டாவது பந்திற்கு கான்வோ ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். சாம்ஸ் இரண்டாவது பந்தை உள்நோக்கி வீச, பந்து கான்வோவை ஏமாற்றி கால்காப்பில் பட, மும்பை வீரர்கள் அவுட் கேட்க, அம்பயரும் எல்.பி.டபிள்யூ தந்துவிட்டார். ஆனால் கான்வோவால் அவுட்டை மறுத்து அப்பீல் செய்ய முடியவில்லை.

காரணம், ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர், பவர்கட் பிரச்சினையால் சிறிது நேரத்திற்கு டி.ஆர்.எஸ் பார்க்க முடியாதென அம்பயர்கள் இரு அணி வீரர்களிடமும் தெரிவித்திருந்தனர். இதைத்தாண்டி அந்தப் பந்து கட்டாயம் ஸ்டம்ப்பை தாக்காது என்று கமெண்ட்ரியில் இருந்த, கிரிக்கெட் எக்ஸ்பர்ட்ஸ்கள் கருத்து தெரிவித்தனர். பவர்கட்டால் பரிதாபமாக வெளியேறினார் டிவோன் கான்வோ!