சிஎஸ்கே அணியை விட பலமான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்த போதிலும், தனது முதல் இரண்டு போட்டிகளை தோற்று இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான தோல்விகளுக்கு என்ன காரணம்? என்று பார்க்கலாம்.
கடந்த ஆண்டு வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது. அப்போது இருந்து வெல்ல வேண்டிய போட்டிகள் எல்லாவற்றையும் மும்பை இந்தியன்ஸ் தோற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முடிவுகள் எடுப்பதில் குழப்பம்
கடந்த ஆண்டு புதிய பந்தில் ஹர்திக் பாண்டியா பந்து வீசியது பெரிய விமர்சனங்களை உண்டாக்கியது. அதேபோல் பேட்டிங் வரிசையில் நிறைய மாற்றங்கள் அடிக்கடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும் ஜெயவர்த்தனே தலைமை பயிற்சியாளராக வந்த போதும் கூட, முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விக்னேஷ் புத்தூரை இரண்டாவது போட்டியில் நீக்கி இருக்கிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியாவது வெற்றி பக்கத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்கின்ற நெருக்கடி இருப்பதால், அது முடிவுகள் எடுப்பதில் பெரிய அழுத்தத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக அனுபவம் இருப்பவர்களே தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ரோகித் சர்மா – ஹர்திக் பாண்டியா
ரோகித் சர்மா களத்தில் முடிவுகளை தனியாக எடுக்க கூடியவராகவும் சரியாக எடுக்கக் கூடியவராகவும் இருந்திருக்கிறார். இந்த விஷயத்தில் ஹர்திக் பாண்டியா பின்தங்கியவராகவே தெரிகிறார். மேலும் பிளேயிங் லெவனை அமைப்பதிலும் ரோகித் சர்மா கேப்டனாக இருந்த காலகட்டத்தில் நல்ல தெளிவு இருந்தது.
இதையும் படிங்க : அம்பதி ராயுடுவை காணவில்லை.. ஆர்சிபி போட்ட பதிவு.. தரமான பதில் கொடுத்த ராயுடு.. ரசிகர்கள் பாராட்டு
இந்த குழப்பங்களோடு சேர்த்து போட்டியை முடிக்க வேண்டிய இடத்தில் களமிறங்கும் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணிக்கு சிறப்பாக விளையாடுவது போல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவது இல்லை. இதனால் வெல்ல வேண்டிய போட்டிகளை கடைசியில் வந்து கோட்டை விடுகிறார்கள். இப்படியான விஷயங்கள் எல்லாம் சேர்ந்து சிஎஸ்கே அணியை விட மும்பை இந்தியன்ஸ் பலமாக இருந்தும் தோற்பதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன!






