ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விளங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவதாக செய்தி வெளிவந்தது.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் இணை உரிமையாளரான பார்த் ஜிண்டால் ரிக்கி பாண்டிங் தானாக பதவி விலகவில்லை என்றும், அவரைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக்கியதற்கான காரணத்தை தற்போது கூறி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்கிய ரிக்கி பாண்டிங் கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் ஓரளவு நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த டெல்லி அணி 2020ஆம் ஆண்டு அவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடியது.
ஆனாலும் அந்த இறுதிப் போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தது. மேலும் 2021ஆம் ஆண்டு காயம் காரணமாக முதல் பாதியை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது பாதிக்குத் திரும்பினாலும் கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்டிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் இரண்டாவது பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தாலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற தவறியது. அதற்கு அடுத்து மூன்று ஆண்டுகளாக டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இந்த சூழ்நிலையால் சமீபத்தில் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அதற்கான உண்மையான காரணத்தை டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறியிருக்கிறார். அதாவது டெல்லி அணிக்கு முழு நேர பயிற்சியாளரை விரும்புவதாகவும், அவர் நமது நாட்டிலோ அல்லது நகரத்திலோ கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “பிசிசிஐயுடன் வீரர்கள் தக்க வைப்பு மற்றும் வெளியீடு குறித்த தகவல்களை ஆலோசிக்கும் மீட்டிங் விரைவில் நடைபெற இருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜேக் ஃப்ரேசர்- மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், முகேஷ் குமார், கலீல் அஹ்மத் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். டெல்லி அணிக்கு முழு நேர பயிற்சியாளராக ஒருவர் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. இந்த ஒன்னு மட்டும் நடந்தா.. தோனி மீண்டும் சிஎஸ்கேக்கு ஆடுவது உறுதி.. வெளியான புதிய தகவல்
இது நமது நாட்டிலும், நகரத்திலும் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்க வேண்டும். இதனால்தான் இப்படி ஒரு முடிவை நாங்கள் எடுத்தோம்” என டெல்லியின் இணை உரிமையாளர் கூறியிருக்கிறார். அதாவது டெல்லி அணிக்கு ஒரு இந்தியர் பயிற்சியாளராக கூறியிருக்கிறார்.






