சேப்பாக்கில் விளையாடும் வரை நான் ஓய்வு பெறமாட்டேன் – ரசிகர்களுக்கு அடுத்தடுத்து 2 இன்ப அதிர்ச்சி கொடுத்த கேப்டன் தோனி

0
776
MS Dhoni

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 67வது போட்டியில், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை ஏற்கனவே ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருந்தாலும், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வென்றால், புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதால் இந்த ஆட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியை எடுத்துக்கொண்டால் ஏலத்தில் அவர்களது செயல்பாடு மிகச்சிறப்பாக இல்லை என்றாலும், சிறப்பாகவே இருந்தது. எந்த அணியுடனும் மோதி வெல்லக் கூடிய வகையில் அனுபவ வீரர்களை வழக்கம்போல் அணிக்குள் கொண்டு வந்திருந்தது. மேலும் இளம் வீரரான ருதுராஜ் இருக்க, இந்திய அன்டர் 19 உலகக்கோப்பையை வென்ற அணியின் வேகப்பந்துவீச்சாளர் ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர் போன்ற இளைஞர்களை அணிக்குள் கொண்டுவந்து, அனுபவமும் இளமையும் கலந்த அணியை உருவாக்கியது!

- Advertisement -

நடப்பு ஐ.பி.எல் தொடரை கொரோனா அச்சத்தால், மொத்தம் 70 லீக் போட்டிகள் மும்பையின் இரு மைதானங்கள், நவிமும்பை மற்றும் மஹாராஷ்ட்ராவின் புனேவின் இரு மைதானங்கள் என நான்கு மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நான்கு மைதானங்களின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சிற்கு ஒத்துழைப்பதோடு, மைதான சூழல்கள் பந்து ஸ்விங் ஆகவும் உதவி செய்தன. இப்படியான ஆடுகளத் தன்மை மற்றும் மைதான சூழல்களைப் பயன்படுத்திக்கொள்ள தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் சென்னை அணியில் இல்லாமல் போனது, பின்னடைவை உருவாக்கிவிட்டது. ஸ்விங் செய்யும் தீபக் சாஹரும், அதிவேகமாய் வீசும் ஆடம் மில்னேவும் காயத்தால் தொடரைவிட்டு வெளியேறியதுதான் இதற்குக் காரணம்.

இதனால் ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் முதல் இரண்டு ஆட்டங்களைத் தோற்றதில்லை என்கின்ற பெருமையோடு களம் கண்ட சென்னை அணி, முதல் நான்கு ஆட்டங்களைத் தோற்று மோசமான சாதனையைப் படைத்தது. நடுவில் சரியான ஆடும் அணியைக் கண்டுபிடிக்க முடியாததால், தொடர் தோல்விகளால், சென்னை அணி இரண்டாம் முறையாய் ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது. ஆனால் இந்திய இளம் வேகப்பந்து கூட்டணியைச் சென்னை அணி இந்த ஐ.பி.எல் சீசனில் கண்டறிந்திருக்கிறது என்றே கூறலாம்.

இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்தும் பரவலாகப் பேசப்பட்டது. தற்போது ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் டாஸின் போது இதற்குப் பதில் அளித்துள்ளார் தோனி. அதில் “சென்னை அணிக்காக அடுத்த சீசன் கட்டாயம் ஆடுவேன். இதுதான் சென்னை அணிக்கும், அதன் இரசிகர்களுக்கும் நான் செய்யும் நியாயமாய் இருக்க முடியும். அதுதான் என் கடைசி சீசனா என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை” என்று தெளிவுப்படுத்தி இருக்கிறார்!

- Advertisement -