வருகிற 2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா மற்றும் நமீபியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் காம்பினேஷன் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ் குப்தா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
தற்போது நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் காயத்தால் அவதிப்பட்ட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா போன்ற ஆடுகளங்களில் ஹர்திக் பாண்டியா போன்ற மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தாஸ் குப்தா தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த இருக்கிறது. இப்போது விளையாடும் அணி சாம்பியன் டிராபி மற்றும் டி20 உலக கோப்பையை வென்ற கலவையானது. இது பெரும்பாலும் மூன்று வேகப் பந்துவீச்சு மற்றும் மூன்று சுழற் பந்து வீச்சு தேர்வை அடிப்படையாகக் கொண்டது. அது ஹர்திக் பாண்டியா அணியில் இருக்கும் போது 4-2 என்ற கலவையில் முடிகிறது. ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை அவர் 100% உடல் தகுதியுடன் இருந்தால் அவருக்கு அணியில் இடம் 100% உறுதி.
இதையும் படிங்க:அபிஷேக் சர்மாவுக்கும் கம்பீருக்கும் நான் சொல்லும் அறிவுரை இதுதான்.. இதை செஞ்சா அடிச்சுக்க முடியாது – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து
ஆனால் இந்திய அணி இந்த மாதிரியான கலவையில் விளையாடுவதற்கு ஒரு மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டும். அதனால் பாண்டியா போன்ற மற்றொரு ஆல்ரவுண்டர் வீரரை இந்திய அணி தயாராக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் தென் ஆப்பிரிக்கா போன்ற அமைப்பில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் நிச்சயம் தேவைப்படுகிறார். நான் சொன்னது போல இன்னும் இரண்டு ஆண்டுகள் கைப்பசம் உள்ளன. எனவே இதற்கு தகுந்தவாறு ஒரு வீரரை இந்திய நிர்வாகம் தயார் செய்ய வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.






