நடப்பு ஐ.பி.எல் தொடரில் ப்ளேஆப்ஸ் செல்லும் அணிகள் என்ற எவருடைய முன் கணிப்பும் 100% சரியாய் இருக்காது. காரணம் இந்த ஐ.பி.எல் தொடரில் புதிதாய் வந்த இரு அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ். ஏலத்தில் குஜராத் அணிக்காக முன்னிருந்து செயல்பட்ட, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெக்ரா, பந்துவீச்சாளர்கள் தேர்வில் செலுத்திய கவனத்தை பேட்ஸ்மேன்கள் தேர்வில் செலுத்த தவறியிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர்கள் எடுத்திருந்த அணியில் விக்கெட் கீப்பர்களே இல்லாமல் இருந்தது. அடுத்து ஒருமாதிரியாய் இந்தக் குறைகளை ஈடுகட்டியும், அணியில் மிடில்வரிசைக்கான பேட்ஸ்மேன்களே யாரும் இல்லை. இதனால் 99% பேர்களின் ப்ளேஆப்ஸ் கணிப்பில் குஜராத் அணி இருந்திருக்க வாய்ப்பே இல்லை. பெரிய கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் கூட, ஏலத்தின் அடிப்படையில் குஜராத் அணிக்கு கடைசி இடத்தையே கொடுத்திருந்தனர்.
ஆனால் எல்லா எதிர் விமர்சனங்களும் ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், திவாட்டியா, ஷமி, யாஷ் தயால் போன்ற வீரர்களின் திடீர் எழுச்சியால் தவிடு பொடியானது. அணிக்குள் நம்பிக்கை ஏற்பட, சுப்மன் கில், விர்திமான் சஹா என்று எல்லா வீரர்களையும் இது எழுச்சியடைய வைத்தது. பந்துவீச்சில் எப்பொழுதும் கலக்கும் ரஷீத்கானை இந்தமுறை பேட்டிங்கிலும் இந்த நம்பிக்கை கலக்க வைத்தது. அனைவரும் சேர்ந்து குஜராத் அணியை கம்பீரமாகக் கொண்டு ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் முதல் அணியாய் வைத்ததோடு, புள்ளி பட்டியலில் இருபது புள்ளிகளோடு முதல் இடத்திலும் வைத்தார்கள்.
இந்தத் தொடரில் குஜராத் அணி வீரர்களின் ஒவ்வொருவரின் ஆட்டமும் எந்தளவிற்கு குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கியமானதோ, அதேயளவில் அந்த வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கும் முக்கியமானது. பலகாலமாக ஐ.பி.எல் தொடரில் தன் முக்கியத்துவத்தை இழந்திருந்த, தென்ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் டேவிட் மில்லர், இந்தத் தொடரில் 13 ஆட்டங்களில் ஏழு ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் 347 ரன்களை, 57.83 சராசரியில், 136.08 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து திரும்ப பழைய கில்லர் மில்லராய் வந்திருக்கிறார்.
2023 ஐ.பி.எல் சீசனுக்கு திரும்ப உள்ள ஐந்து நட்சத்திர வீரர்கள் !https://t.co/g3QRBbPam4
— Swag Sports Tamil (@SwagSportsTamil) May 18, 2022
ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் தென்ஆப்பிரிக்க அணி ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வரவிருக்கிறது. இந்தத் தொடருக்கான 16 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொடர் பற்றி பேசியிருந்த டேவிட் மில்லர் தான் விளையாடி வரும் குஜராத் அணியின் சகவீரர்களான இந்திய வீரர்கள் சுப்மன் கில், ராகுல் திவாட்டியா இருவரும் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்று தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் இந்தியாவின் அதிவேக பவுலரான உம்ரான் மாலிக் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது!