உலக கிரிக்கெட்டில் அதிரடி வீரராக வலம் வந்தவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலியா அணியில் மிகச் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக டேவிட் வார்னர் இருந்திருக்கிறார். 38 வயதான டேவிட் வார்னர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
டேவிட் வார்னர் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களும், 166 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களும், 110 சர்வதேச டி20 போட்டிகள் வரையாடி 3,277 ரன்கள் அடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக டேவிட் வார்னர் 49 சதம் அடித்திருக்கிறார். டேவிட் வார்னரின் அதிரடி ஆட்டம் காரணமாக அவர் உலகில் உள்ள பல்வேறு தொடர்களில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் மன்னன்:
குறிப்பாக ipl தொடரில் டேவிட் வார்னர் தவிர்க்க முடியாத வீரராக ஒரு காலத்தில் விளங்கி வந்தார். ஐபிஎல் தொடரில் 184 போட்டியில் விளையாடி மொத்தமாக 6565 ரன்கள் குவித்து இருந்தார். இதில் நான்கு சதம், 62 அரை சதம் அடங்கும். இதேபோன்று bpl, cpl, இங்கிலாந்தில் நடைபெறும் விட்டால்டி பிளாஸ்ட் துபாயில் நடைபெற்ற இன்டர்நேஷனல் லீக் டி20 மற்றும் பிக் பேஸ் லீக் போன்ற தொடர்களில் டேவிட் வார்னர் விளையாடி வந்தார்.
இந்த சூழலில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி லீக் தொடரில் டேவிட் வார்னர் தனது பெயரை ஏலத்தில் சேர்க்கவில்லை. இது குறித்து ரசிகர் ஒருவர் டேவிட் வார்னரிடம் அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் தாங்களும் பெயர் கொடுங்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்.
வாய்ப்பு தரப்படவில்லை என சோகம்:
அதற்கு பதில் அளித்த டேவிட் வார்னர், எனக்கு யாரும் எந்த வாய்ப்பும் தரவில்லை என்று அழுகின்ற எமோஜியை போட்டு இருந்தார். டேவிட் வார்னரின் இந்த பதில் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. t20 கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் மொத்தமாக 399 போட்டிகளில் விளையாடி 12 191 ரன்களை அடித்துள்ளார்.
அண்மையில் அவர் பங்கு பெற்ற பிபிஎல் மற்றும் ஐஎல்டி 20 தொடரில் கூட டேவிட் வார்னர் நன்றாக விளையாடினார். இதன் மூலம் அவரால் மேலும் இரண்டு ஆண்டுகள் வரை விளையாட முடியும். ஆனால் ஐபிஎல் ஏலத்தில் டேவிட் வார்னர் விலை போகாதது அவருடைய மனதை வெகுவாக பாதிக்க வைத்திருக்கிறது. இதனால் வார்னர் எம்எல்சி தொடரிலும் பங்கு பெறவில்லை.