பும்ரா ஷாகின் இல்லை.. என் வாழ்நாளில் சந்தித்த ரொம்ப கஷ்டமான பவுலர் இவர்தான்.. டேவிட் வார்னர் ஓபன் டாக்

0
26652

டேவிட் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தாலும், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமும், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா வீரரான இவருக்கு, ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். 2018ஆம் ஆண்டு, சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக 12 மாதம் கிரிக்கெட் விளையாட தடையும் பெற்றார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பேசுபொருளாவார் டேவிட் வார்னர்.

37 வயதான இடதுகை தொடக்க ஆட்டக்காரரான வார்னர், 111 டெஸ்ட் போட்டிகள் விளையாடி, 26 சதங்களுடன், 8695 ரன்களும் 161 ஒருநாள் போட்டியில் விளையாடி 22 சதங்களுடன், 6932 ரன்களும், 99 டி20 போட்டிகள் விளையாடி ஒரு சதத்துடன், 2894 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் போட்டி தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் டேவிட் வார்னர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி, ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் தொடங்க உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டேவிட் வார்னர், ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தின் பேட்டியில், தான் சந்தித்த பந்துவீச்சாளர் பற்றி பேசுகையில், “நான் எதிர்கொண்டதில் டேல் ஸ்டெய்னின் பந்துவீச்சு, மிகவும் சவாலானது அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பெர்த் மைதானத்தில், 2016-17ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல், ஷான் மார்ஷ், நானும் டேல் ஸ்டெயின் பந்துவீச்சை எதிர்கொண்டோம். மிகவும் சவாலாக இருந்தது. அவரது பந்துவீச்சில் தன்னால் புல்ஷாட் அடிக்க முடியவில்லை, தொடர்ந்து அவரது பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என ஷான் மார்ஷ் தன்னிடம் தெரிவித்தார். மேலும் டேல் ஸ்டெய்னின் பந்து என் முதுகில் தாக்கியது. அந்தப் போட்டியில் தான் அவரது தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

சவுத் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்களை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பத்தாவது இடத்திலும், சவுத் ஆப்பிரிக்காவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் ஒரு நாள்போட்டியில் 196 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 64 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

டேவிட் வார்னர் தொடர்ந்து பேசுகையில், “அவரது பந்துவீச்சின் மூலம் எதிரணிக்கு கடுமையான சவால்களை அளிப்பார். டேல் ஸ்டெய்ன் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு ஸ்விங் செய்யும் விதம், மிட்செல் ஸ்டார்க் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு ஸ்விங் செய்வதற்கு இணையானது. அவரிடம் களத்தில் புன்னகையை எதிர்பார்க்க முடியாது. அவரது பந்துவீச்சை போலவே, அவரிடம் இருந்தும் அனல்கள் தெறிக்கும். மேலும் அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் தொட எளிதில் வாய்ப்பளிக்க மாட்டார்” என்று கூறினார்.

தான் சந்தித்த சவாலான பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்டூவர்ட் பிராட் பெயர்களை டேவிட் வார்னர் குறிப்பிடாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -