ஐபிஎல் தொடரை எந்த ஊரில் நடத்தினாலும் இந்த 3 அணிகளுக்கு மட்டும் தான் ரசிகர்களிடம் அதிக ஆதரவு கிடைக்கிறது – டேவிட் வார்னர் புகழாரம்

0
1151
David Warner DC

இந்திய கிரிக்கெட் போர்ட் நடத்தும், உலகின் நம்பர் 1 டி20 லீக்கான இன்டியன் பிரிமியர் லீக்கில் இந்திய வீரர்களை விட தன் சிறப்பான கிரிக்கெட் திறமைகளால் ஒரு வெளிநாட்டு வீரர் புள்ளி விபரங்களில் மிகச் சிறப்பான இடத்தில் இருக்கிறார் என்றால் அந்த வீரர் ஆஸ்திரேலியாவின் பிரபல வீரர் டேவிட் வார்னர்தான்!

2009ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக ஐ.பி.எல் தொடரில் முதன் முதலில் ஆட ஆரம்பித்த டேவிட் வார்னரை, 2014ஆம் ஆண்டு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 5.50 கோடிக்கு வாங்கியது. பின்பு பால் டேம்பரிங் விவகாரத்தால் ஓராண்டு தடை பெற்ற டேவிட் வார்னர் 2018ஆம் ஆண்டு விளையாட முடியாமல் போக, அவரை 12.50 கோடிக்குத் தக்க வைத்துக்கொண்டது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம்!

- Advertisement -

ஹைதராபாத் அணியோடு மிக நெருக்கமான உறவிலிருந்த டேவிட் வார்னருக்கு 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அணி நிர்வாகத்தோடு உண்டான உரசல்கள் மிகப்பெரிய பிளவை உண்டாக்கிவிட்டது. அந்த ஆண்டு எட்டுப் போட்டிகளில் மட்டுமே விளையாடி 191 ரன்கள் மட்டுமே எடுத்தார். நடுவில் வீரர்களுக்குத் தண்ணீர் பாட்டில்கள் தூக்கியும்,மைதானத்தில் அமர்ந்து கொடியசைக்கும் நிலைக்கும் சென்றார். அணியில் இடம் மறுக்கப்பட்டதோடு அவரிடம் இருந்து கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு கேன் வில்லியம்சனிடம் கொடுக்கப்பட்டது.

ஐ.பி.எல் தொடரில் வரலாற்றில் ஹைதராபாத் அணியை எடுத்துக்கொண்டால், அந்த அணிக்கான வெற்றிக்கரமான வீரரும் கேப்டனும் டேவிட் வார்னராகத்தான் இருப்பார். 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக அணியை வழிநடத்தியதோடு, ஒரு பேட்ஸ்மேனாக 848 ரன்கள் குவித்து, அந்த ஆண்டு ஹைதராபாத் அணியை சாம்பியன் ஆக்கினார்.

ஹைதராபாத் அணி நிர்வாகத்தோடு ஏற்பட்ட உரசலால் ஏலத்திற்கு வந்த இவரை டெல்லி அணி 6.25 கோடிக்கு வாங்கியது. தேசிய அணி விதிமுறையால் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியில் முதல் மூன்று போட்டிகளைத் தவறவிட்ட இவர் 12 ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி 432 ரன்கள் குவித்திருக்கிறார். ப்ளேஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற மும்பை அணியோடு நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயச் சூழலில் டெல்லி அணி தோற்று வெளியேறியது. இதனால் பெங்களூர் அணி தகுதிபெற்று ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது. மும்பையும் டெல்லியும் மும்பை மைதானத்தில் மோதிய இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு மைதானத்தில் இரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது!

- Advertisement -

தற்போது இதுகுறித்து டேவிட் வார்னர் பேசியுள்ளார். அதில் அவர் “சென்னை, மும்பை, பெங்களூர் இந்த மூன்று அணிகளுக்கும் மகத்தான விசுவாசமான இரசிகர்கள் நிறைய உள்ளனர். இந்த அணிகள் எங்கு விளையாடினாலும் மைதானம் இரசிகர்களால் நிரப்பி வழியும். மேலும் அணிகளின் பெயர்களை இரசிகர்கள் சத்தமாக உச்சரிப்பதை நீங்கள் கேட்கலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும் டெல்லி அணியுடனான தனது நெருக்கம் பற்றி பேசியவர் “அணியின் ஓய்வரையில் ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன் இருக்கிறார்கள். அங்கு எப்போதும் ஒரு குடும்பம் போலான சூழல்தான் நிலவும். அணி உரிமையாளர்கள் ஒவ்வொரு வீரர்களையும், சிறு விசயங்களையும் கூட சிறப்பாக கவனித்துக் கொள்கிறார்கள்” என்று கூறினார்.

அவர் டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் பற்றிக் கூறும்பொழுது “அவர் ஒரு திறமையான இளம் வீரர். அவரிடம் அபார திறமை இருக்கிறது. பயமற்ற கிரிக்கெட் விளையாடும் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான விசயங்களை நிச்சயம் செய்வார். தரமான வீரர்களைக் கொண்ட அணியை எப்படி வழிநடத்துவது என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் எந்தவொரு விசயத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பது ஆச்சரியமானது” என்று புகழ்ந்து பேசினார்!