இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர முடிவு செய்தது. ராமகிருஷ்ணா கோஸ் அறிமுகம் செய்யப்பட்டார். மேலும் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரும் விளையாடினார்கள்.
மும்பை சரிவு
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் ஜாக்ஸ் 1, ரியால் ரிக்கல்ட்டன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த நமன் திர் சிறப்பாக விளையாடி 37 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக ஆரம்பித்த சூரியகுமார் யாதவ் 12 பந்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து திலக் வர்மா 5 ரன், ஹர்திக் பாண்டியா 18, ராபின் மின்ஸ் 5 ரன் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இறுதியாக மும்பை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் காம்போஜ் 3, நூர் அகமத் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
சிஎஸ்கே வெற்றி
இதற்கு அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் 9 பந்தில் 11 ரன், உர்வில் படேல் 12 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 48 பந்தில் 67 ரன், கார்த்திக் சர்மா 40 பந்தில் 54 ரன் ஆட்டம் இழக்காமல் எடுக்க சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : இனிமேல் முடியாது.. ருதுராஜ் சிஎஸ்கே எதிர்காலத்திற்காக எடுத்த அதிரடி முடிவு.. பங்காளி மும்பை உடன் பெரிய பரிசோதனை
தற்போது மும்பை ஒன்பது போட்டிகளில் 7 போட்டிகளை தோற்று நான்கு புள்ளிகள் உடன் இருக்கிறது. மேலும் மீதமிருக்கும் ஐந்து போட்டியில் வென்றாலும் மொத்தம் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். எனவே மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறுகிறது.






