இன்று சிஎஸ்கே அணி தங்களின் கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் அதிரடியான சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்க வைக்கலாம் என்கின்ற நிலையில் குஜராத் களமிறங்கியது. சிஎஸ்கே அணி வெற்றி உடன் மோசமான இந்த சீசனை முடித்து வெளியேறுவதற்காக களம் இறங்கியது.
சிஎஸ்கேவின் புதிய அணுகுமுறை
முதலில் பேட்டிங் செய்ய வந்த சிஎஸ்கே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆயுஸ் மத்ரே 17 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் எடுத்தார். ஒரு முனையில் பொறுமையாக விளையாடிய இன்னொரு துவக்க ஆட்டக்காரர் கான்வே 35 பந்துகளில் 52 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் வந்த டிவால்ட் பிரிவிஸ் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
சரிந்து விழுந்த குஜராத்
இதைத்தொடர்ந்து குஜராத் அணியின் தூண்களான கேப்டன் கில் 9 பந்தில் 13 ரன், ஜோஸ் பட்லர் 7 பந்தில் 5 ரன், ரூதர்போர்டு 4 பந்தில் ரன் ஏதும் இல்லாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த சாய் சுதர்சன் 28 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். முடிவில் குஜராத் அணி 18 புள்ளி 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. சிஎஸ்கே அணி கடைசிப் போட்டியில் 83 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் சிஎஸ்கே பந்துவீச்சில் காம்போஜ், நூர் அகமது தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சிஎஸ்கே அடித்த அதிகபட்ச ஸ்கோர்.. 19 பந்தில் அரைசதம்.. கடவுளுக்கு நன்றி சொன்ன பிரவீஸ்
தற்போது புள்ளி பட்டியலில் நான்கு இடங்களில் இருக்கும் மூன்று அணிகளான பஞ்சாப், ஆர்சிபி, மும்பை அணிகளுக்கு தலா ஒரு போட்டி மீதம் இருக்கிறது. இந்த அணிகள் கட்டாயம் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை பிடிக்க முடியும். மேலும் நான்கு அணிகளுக்குமே முதல் இரண்டு இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே மும்பை பஞ்சாப் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போட்டியும், ஆர்சிபி லக்னோ மோதிக் கொள்ளும் போட்டியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறி இருக்கிறது!






