முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் “சின்ன தல” சுரேஷ் ரெய்னா இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே.. ருத்துராஜ் கெய்க்வாட்-க்கு இதான் முதல்முறை.. சிஎஸ்கே பிளேயிங் லெவனில் வினோதம்!

0
79

நான்கு வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே அணி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. முதன்முறையாக சுரேஷ் ரெய்னா பிளேயிங் லெவனில் இல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு தோல்வியை சந்தித்தது. தனது இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

- Advertisement -

கடைசியாக 2019ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு வருடங்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மீண்டும் பழைய முறைப்படி, ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிக முக்கிய அங்கமாக இருந்து வந்த சுரேஷ் ரெய்னா, சென்னை ரசிகர்களால் “சின்ன தல” என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இவர் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் சீசனில் சொந்த காரணங்களுக்காக விலகினார்.

அதன் பிறகு கடந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு நடந்த ஏலத்தில், சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. வேறு எந்த அணிக்கும் தான் விளையாடப்போவதில்லை என்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவித்தார். இன்றளவும் எந்தவிதமான கசப்பும் இன்றி சிஎஸ்கே அணிக்கு சப்போர்ட் செய்து வருகிறார்.

- Advertisement -

நான்கு வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கும் சிஎஸ்கே அணி, தனது பிளேயிங் லெவனில் சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதல்முறையாக விளையாடவுள்ளது. இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ரெய்னா இருந்திருக்கிறார். 2008ஆம் ஆண்டு துவங்கி 2019ஆம் ஆண்டு வரை இந்த மைதானத்தில் சிஎஸ்கே விளையாடிய ஒரு போட்டியையும் தவறவிடாமல் ரெய்னா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளார். 2019 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்தாலும், இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. 2020ஆம் ஆண்டு சீசன் முதல் பிளேயிங் லெவனில் விளையாட்டி வருகிறார். முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளார்