இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 20 வயதான உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வி விராட் கோலியுடன் தான் உரையாடியது குறித்தான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் சமீர் ரிஸ்வி மீது 8.40 கோடி ரூபாய் முதலீடு செய்து அவரை வாங்கியது. தோனிக்கு அடுத்து இளம் வீரர்களை மையப்படுத்திய அணியை உருவாக்க சிஎஸ்கே முயற்சி செய்வது வெளிப்படையாக தெரிந்தது.
உத்திர பிரதேச டி20 லீக்கில் கடந்த வருடம் ஒரே சீசனில் இரண்டு சதங்கள் அடித்து எல்லோருடைய கவனத்தையும் சமீர் ரிஸ்வி ஈர்த்தார். இவருடைய ஷாட்களை பார்க்கும் பொழுது அது அப்படியே வலது கையில் சுரேஷ் ரெய்னா விளையாடினால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. இதன் காரணமாக இவரை வலதுகை சுரேஷ் ரெய்னா என எல்லோரும் அழைத்தார்கள்.
மேலும் சுரேஷ் ரெய்னா இவரைப் பற்றியான நல்ல மதிப்பீட்டை வைத்திருந்தார். அதுவே இவரை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வந்தது என்றும் கூறலாம். சிஎஸ்கே அணிக்காக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் முத்திரை பதிக்கவில்லை என்றாலும் கூட, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உலகத் தரம் வாய்ந்த ரஷித் கானை அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் இவர் அடித்தது இவருடைய தரத்தை வெளிப்படுத்தியது.
சமீர் ரிஸ்வி மகேந்திர சிங் தோனி பற்றி கூறும்பொழுது அவர் தன்னுடைய ஐடியல் என்று கூறியிருந்தார். அதே சமயத்தில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் விராட் கோலி என்றும் அவரை களத்தில் நகலெடுக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : 430 ரன் 8 விக்கெட்.. சண்டிமல் சவால் பலிக்குமா.. இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை உலக சாதனை படைக்குமா?.. சுவாரசிய கட்டத்தில் 2வது டெஸ்ட்
இது குறித்து சமீர் ரிஸ்வி கூறும் பொழுது “விராட் கோலி ஒரு அற்புதமான மனிதர். நான் அவருடன் பேசும் பொழுதெல்லாம் என்னுடன் அவர் மிகவும் நன்றாக பேசுவார். அவர் பேசும் பொழுது எனக்கு புரியும் வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் விளக்கிக் கூறுவார். அவருடன் பேசுவது என்பதே எனக்கு மிகவும் பிடித்தமானது.நான் ஜாம்பவான் உடன் பேசுகிறேன் என்பதையே அவர் என்னை உணர விடாமல் மிகவும் இயல்பாக வைத்திருந்தார். அவருடைய அந்த குணம் எனக்கு பிடித்திருந்தது” என்று கூறி இருக்கிறார்.