தற்போது சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டு இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சாம் கரன் மகேந்திர சிங் தோனி குறித்து மிகவும் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சிஎஸ்கே அணியில் ஏற்கனவே சாம் கரன் விளையாடி இருக்கிறார். இதற்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சென்ற அவர், நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 2.4 கோடி ரூபாய்க்கு மீண்டும் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். தற்போது சிஎஸ்கே அணிக்கு திரும்பி இருப்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் கொடுத்த பெரிய விலை
ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு கட்டத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் அப்போதைய கேப்டன் ஷிகர் தவான் விளையாட முடியாத காலத்தில் இவர் கேப்டன் பொறுப்பையும் ஏற்று அணியை வழிநடத்தி இருந்தார்.
தற்போது ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால் ஆல் ரவுண்டர்களுக்கான தேவை பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக சாம் கரன் விலையும் பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. இத்துடன் அவருடைய பந்துவீச்சு பெரிய அளவில் நம்பிக்கை கொடுப்பதாக இல்லாதது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹோட்டல் அறையில் இதுதான் நடக்கிறது
தற்போது தோனி குறித்து பேசி இருக்கும் சாம் கரன் கூறும் பொழுது “நான் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்படுகிறேன். அடுத்து பார்த்தால் தான் இரவு 11 30 மணிக்கு தோனி மற்றும் ஜடேஜா உடன் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். இது உலகத்தில் வேறு எங்கு நடக்கும் என்று யோசிக்கிறேன். விளக்குகள் எரிகிறது அனைவரும் பந்தை அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அணியை சுற்றி உள்ளூர் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தோனி இருக்கிறார். அவருடைய ஆரா மிகப் பெரியதாக இருக்கிறது”
இதையும் படிங்க : சிஎஸ்கே மும்பை மேட்ச்.. 2 அணிகளின் உத்தேச பிளேயிங் XI.. திடீர் பலவீனம்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?
“அவர் விளையாட்டில் பெரிய தருணங்களை பார்த்தவர். ஆனால் அவர் பீதி அடைந்து நான் பார்த்தது கிடையாது. அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். இப்பொழுதும் நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் அவருடைய அறை எப்பொழுதும் திறந்து இருக்கிறது. அங்கு சென்று வீரர்கள் அவருடன் வீடியோ கேம் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் தொடர்பாக அவரிடம் பேசுகிறார்கள். அவர் அணுகுவதற்கு மிகவும் எளிதான மனிதராக இருக்கிறார். இப்பொழுது எங்கள் ஹோட்டல் முழுக்க அவரைப்பற்றிதான் பேச்சு” என்று கூறி இருக்கிறார்.






