பாயிண்ட்ஸ் டேபிள் முதல் இடத்தை இழந்தது சிஎஸ்கே ; சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறியது!

0
5936
IPL2023

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் முதல் ஓவரின் முதல் பந்தில் இருந்தே அதிரடியில் மிரட்டினார்கள். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவரில் 86 ரன்கள் எடுத்தது. பட்லர் 21 பந்தில் நான்கு பவுண்டரி உடன் 27 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் 17, சிம்ரன் ஹெட்மையர் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 43 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இளம் வீரர் துருவ் ஜுரல் 15 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 34 ரன்கள் அதிரடியாக எடுத்தார். ஆட்டம் இழக்காமல் படிக்கல் 13 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். அஸ்வின் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஐந்து விக்கட்டுகள் இழப்புக்கு 202 ரன் எடுத்தது. இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன்கள் இதுதான். துஷார் தேஷ்பாண்டே நான்கு ஓவர்களில் 42 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

பெரிய மைதானத்தில் பெரிய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு பவர் பிளேவில் இந்த முறை கான்வே ஏமாற்றினார். பதினாறு பந்துகளில் ஒரு பவுண்டரி உடன் எட்டு ரன்கள் எடுத்த அவர் பவர் பிளேவின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்ராஜ் 29 பந்துகளில் ஐந்து பவுண்டரி உடன் 47, ரகானே 15, அம்பதி ராயுடு 0 என அடுத்தடுத்து வெளியேறினார்கள். தேவைப்படும் ரன் ரேட் எகிறிக்கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் மொயின் அலி இருவரும் அதிரடியாக விளையாடி அரை சத பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்கள். எதிர்பாராத விதத்தில் மொயின் அலி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஒரு முனையில் அதிரடியான ஆட்டத்தை சிவம் துபே வெளிப்படுத்தினார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் 33 பந்துகளில் இரண்டு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 15 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் உடன் 23 ரன்கள் எடுத்தார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து ராஜஸ்தான் ராயல் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தோல்வியால் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மூன்றாவது இடத்தில் இருந்த ராஜஸ்தான் முதல் இடத்திற்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தில் இருந்த குஜராத் அதே இடத்தில் தொடர்கிறது. இந்த மூன்று அணிகளும் 8 ஆட்டத்தில் 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகள் உடன் இருக்கின்றன!