தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கேப்டன் ருதுராஜின் அணித் தேர்வு மற்றும் கள முடிவுகள் குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இன்று சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏற்கனவே மெகா ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட சிஎஸ்கே அணி பலவீனமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இருப்பதை வைத்து சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க சிஎஸ்கே ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அணித் தேர்வில் ஏமாற்றிய ருதுராஜ்
இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே பிளேயிங் லெவலில் அனைவரும் எதிர்பார்த்தபடியே கான்வே இடம் பெற்று இருந்தார். இது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. அதே சமயத்தில் இரண்டாவது வேகப் பந்துவீச்சாளர் இடத்துக்கு அனைவரும் அன்சூல் காம்போச் வேண்டும் என கூறி வந்தார்கள். ஆனால் கேப்டன் ருதுராஜ் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரியை கொண்டு வந்தார். இது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு மிகவும் சிறப்பான பந்துவீச்சாளராக நூர் அகமத் இருந்து வருகிறார். அவருக்கு ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில் 19-வது ஓவரை அவருக்கு ருதுராஜ் தருவார் என எதிர்பார்த்தார்கள். இப்படியான நிலையில் அந்த ஓவரை ஏற்கனவே நிறைய ரன்கள் தந்து இருந்த முகேஷ் சௌத்ரிக்கு ருதுராஜ் கொடுத்தார். அந்த ஓவரில் முகேஷ் சௌத்ரி 15 ரன்கள் விட்டுக் கொடுத்ததுடன், நான்கு ஓவரில் 50 ரன்கள் விட்டுத் தந்து ரசிகர்களை கோபம் அடைய வைத்தார்.
சொந்த ஊர் பாசமா?
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் முதலில் அன்சூல் காம்போஜை தேர்வு செய்திருக்க வேண்டும் எனவும், தன்னுடைய சொந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்கின்ற காரணத்தினால் முகேஷ் சௌத்ரியை ருதுராஜ் தேர்வு செய்து விட்டார் எனவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநில அணிக்காக ஒன்றாக விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் திரிபாதியும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. மும்பை அணி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. பும்ரா எப்போது திரும்புகிறார்.. வெளியான தேதி
மேலும் 19 ஆவது ஓவரை சிறந்த பவுலரான நூர் அகமதுக்கு கொடுக்காமல் முகேஷ் சவுத்ரிக்கு கொடுத்ததையும் சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு இருந்த முன்னாள் வீரர்களும் சிஎஸ்கே கேப்டனின் இந்த முடிவு மிகவும் தவறானது எனவும், எப்பொழுதும் ஒரு தொடரில் யார் சிறந்த பவுலராக இருக்கிறாரோ அவரின் அனைத்து ஓவர்களையும் வீசவைக்க வேண்டும் எனவும் விமர்சனம் செய்திருக்கிறார்கள். இதனால் ருதுராஜுக்கு நெருக்கடி அதிகரித்து இருக்கிறது!






