நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 43-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின.
இதில் சொந்த மண்ணில் சிஎஸ்கே 11 ரன்கள் வித்தியாசத்தில் திரும்பவும் தோல்வியை சந்தித்தது குறித்து கேப்டன் எம்எஸ் தோனி தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
சிஎஸ்கே தொடர் தோல்வி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசை இழந்த சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. வழக்கம் போல இந்த முறையும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே ஆட்டம் இழக்க, மிடில் வரிசை பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 42 ரன்கள் குவித்தார். இதனால் சிஎஸ்கே 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டம் இழந்தாலும் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் இசான் கிசான் சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளில் 44 ரன்கள் குவித்து இசான் கிசான் ஆட்டம் இழந்த நிலையில் அவருக்குப் பிறகு இறுதியில் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாட 22 பந்துகளை எதிர் கொண்டு 32 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குறித்து வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து எம்எஸ் தோனி
இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து எம்.எஸ். தோனி பேசும்போது “நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். முதல் இன்னிங்ஸ் ஆடுகளம் சற்று நன்றாகவே இருந்தது. 155 என்பது நியாயமான ஸ்கோர் கிடையாது. 10வது ஓவருக்கு பிறகு ஆடுகளம் இரட்டை வேகத்தில் இருந்தது பொதுவான விஷயம்தான். ஆனால் எங்கள் ஸ்கோர் கார்டில் நாங்கள் இன்னும் சற்று அதிகமான ரன்களை வைத்திருக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸ் பந்து வீசுவதற்கு சற்று உதவியாக இருந்தது. எங்கள் சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசினார்கள்.
இதையும் படிங்க:சொந்த மண்ணில் வரலாற்று தோல்வி அடைந்த சிஎஸ்கே.. கமிந்து மெண்டிஸ் அசத்தல்.. ஆறுதல் அளித்த ப்ரெவிஸ்.. 5 விக்கெட்டில் சன்ரைசர்ஸ் வெற்றி
ஆனால் நாங்கள் வெற்றி பெறுவதற்கு 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். மிடில் வரிசையில் ப்ரெவிஸ் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவரைப் போன்று அதிரடியாக விளையாடக் கூடிய வீரர் தான் இப்போது தேவை. சிறப்பான சுழற் பந்துவீச்சாளர்கள் வரும்போது தான் நாங்கள் சிரமப்படுகிறோம் என்று நினைக்கிறேன். இதற்கு ஆக்ரோஷமாகவோ அல்லது நடுவில் பெரிய ஷாட் அடிக்கும் அளவுக்கு அணியின் தரமிருக்க வேண்டும். உங்கள் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் ஓட்டை இருந்தால் அதனை அடைக்கலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அது மிகவும் கடினமாகிவிடும். 4 பேர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் போட்டியில் அவ்வப்போது மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத வகையில் மாறிவிடும். தொடர்ந்து 200 ரன்கள் வரை எடுக்க முடியாது. ஆனால் நிலமையை அறிந்து அதற்கு ஏற்ப ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்” என்று பேசி இருக்கிறார்






