இந்தியா இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று டி20 போட்டிகளும், அதற்குப் பிறகு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. இதன் முதல் டி20 போட்டி வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெயசூர்யா இந்தியாவின் சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
டி20 உலக கோப்பையை வென்றதோடு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். இந்த சூழ்நிலையில் இளம் வீரர்கள் குழு ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றது.
அதற்குப் பிறகு சீனியர் வீரர்கள் அனைவரும் திரும்பிய நிலையில், இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். மூன்று முன்னணி சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை தோல்வியால் இலங்கை அணியில் புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஆன ஜெயசூர்யா சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், இலங்கை அணி இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் உலகத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள். அவர்களது திறமை மற்றும் அவர்கள் விளையாடிய கிரிக்கெட் விதத்தை பார்க்கும் போது ஜடேஜா உடன் சேர்ந்து அவர்கள் கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும். அவர்கள் இல்லாமல் இந்திய அணி டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதையும் படிங்க:இன்னும் 2 நாள்.. இந்திய தொடரில் இருந்து இலங்கை நட்சத்திர வீரர் ரூல்ட் அவுட்.. பெரிய பின்னடைவு
அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். எனவே அவர்கள் இல்லாத சூழ்நிலையை நாங்கள் இந்திய அணியை ஜெயிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார். டி20 உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட வனிந்து ஹசரங்காவுக்கு பதிலாக அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் டி20 உலக கோப்பையில் இடம் பெறாத குசல் பெரேரா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோரும் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கின்றனர்.