லக்னோ அணிக்கு எதிராக சென்னை தோல்வி ; ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறை இந்த மோசமான சாதனையைப் படைத்துள்ள சி.எஸ்.கே

0
236
LSG vs CSK IPL 2022

2022 ஐ.பி.எல் 15-வது சீசனின் ஆறாவது நாளின் ஏழாவது ஆட்டம், மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில், சென்னை லக்னோ அணிகள் மோதின. டாஸை வென்ற லக்னோ அணியின் கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட் செய்தது.

முதல் ஆட்டம் போலவே இந்த ஆட்டத்திலும் ருதுராஜ் ஏமாற்ற, லக்னோ அணியின் பந்துவீச்சை தனி ஆளாய் சிதைத்த உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 22 பந்துகளுக்கு 35 ரன்களும், சிவம் துபே 30 பந்துகளுக்கு 49 ரன்களும், இறுதிக்கட்டத்தில் தோனி 6 பந்துகளுக்கு 16 ரன்கள் அடிக்க, இருபது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்தது 210 ரன்களை குவித்தது சென்னை அணி!

- Advertisement -

அடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு ராகுல்-டிகாக் ஜோடி 99 ரன்களை குவித்தது. ராகுல் 40 [26], டிகாக் 61 [45] என்று அடித்து வெளியேறினார்கள். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒருமுனையில் எவின் லீவிஸ் உறுதியாய் நின்று ஆட ஆட்டம் பரப்பரப்பானது. கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19 வது ஓவரை வீசிய சிவம் துபேவை இளம்வீரர் பதோனியும், லீவீசும் நையப்புடைக்க, அந்த அவரில் மட்டும் 25 ரன்கள் வர, லக்னோ எளிதாய் வென்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லீவிஸ் 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

15 வருட ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக முதல் இரு ஆட்டங்களைத் தோற்றுள்ளது. இந்தத் தோல்வி சென்னை அணி இரசிகர்களை மட்டுமின்றி, சென்னை அணி வீரர்களையுமே பாதித்திருக்கிறது என்றே கூறலாம்!