நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 30வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை லக்னோ மோதல்
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி சிஎஸ்கே அணியில் டெவான் கான்வேவுக்கு பதிலாக ஷேக் ரசீத் தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். மேலும் ஜேமி ஓவர்டன் மீண்டும் இந்த போட்டியில் வாய்ப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பேட்டிங் தொடங்கிய லக்னோ அணிக்கு எய்டன் மார்க்ரம் 6 பந்துகளில் 6 ரன் எடுத்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் 25 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
மூன்றாவது வரிசை வீரரான நட்சத்திர ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரான் இந்த முறை 8 ரன்னில் வெளியேற, கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை விளையாடினார். 49 பந்துகளை எதிர் கொண்டு 63 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேற, லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
5 விக்கெட்டில் சிஎஸ்கே வெற்றி
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு பவர் பிளேவில் 4.5 ஓவர்களில் 52 ரன்கள் குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய ரசீத் 19 பந்துகளை எதிர் கொண்டு 27 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். அதற்குப் பிறகு வழக்கம் போல ராகுல் திருப்பாதி 9 ரன்னில் ஆட்டம் இழக்க ஜடேஜா 7 ரன்னில் வெளியேறி ஆச்சரியம் அளித்தார். இதில் எதிர்பாராத விதமாக ரச்சின் ரவீந்திரா 37 ரன்னில் வெளியேற திடீரென்று சென்னை அணி 111 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையும் படிங்க:பிசிசிஐ அந்தப் பையனுக்கு இந்த அநியாயம் செய்யக்கூடாது.. அவர் என்ன தப்பு செஞ்சாரு – சுனில் கவாஸ்கர் ஆதரவு
அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சிவம் தூபே மற்றும் தோனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்த சிவம் தூபே 37 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 43 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதில் எம்எஸ் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் இறுதியில் சென்னை அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அதற்குப் பிறகு 5 ஆட்டங்கள் கழித்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.






