ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய வீரர்களை எடுத்து இந்த ஆண்டு வலிமையாக களம் இறங்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன்
சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடுகளத்திற்கு தகுந்தவாறு திறமையான வீரர்களை அணிக்குள் வாங்கி வலிமையாக கட்டமைத்துள்ளது. கடந்த ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியிருக்கிறார். கடந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
இந்த சூழ்நிலையில் இந்த அணிக்கு ருத்ராஜ் கேப்டனாக தலைமை தாங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திர சிங் தோனியை போல கூலான அணுகுமுறையை வைத்திருக்கும் ருத்ராஜ், தன்னை ஸ்லெட்ஜிங் செய்தால் அதை தான் பெரிதாக கண்டு கொள்ள மாட்டேன் எனவும், அதுவே தனது அணி வீரர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அப்போது எந்த வகையிலும் தான் பின் வாங்க மாட்டேன் என சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
நான் பின்வாங்குபவன் அல்ல
இது குறித்து அவர் கூறும் போது “யாராவது என்னை ஸ்லெட்ஜிங் செய்தால் நான் எதுவும் சொல்லாமல் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் நான் ஒரு கேப்டனாக இருந்து என் அணி வீரர்களை யாராவது வம்பு இழுக்கும் வகையில் நடந்து கொண்டால் எந்த சூழ்நிலையிலும் பின் வாங்கக் கூடிய ஒருவன் அல்ல” என்று பேசியிருக்கிறார். கடந்த ஆண்டு மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பதவியை விட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ருத்ராஜ் கேப்டனாக பதவியேற்று சென்னை அணியை சிறப்பாக வழி நடத்தினார்.
இதையும் படிங்க:துபாய் பிட்ச்ல இந்திய அணிக்கு இது நடந்திருந்தா.. யாரும் வாய் திறக்க மாட்டாங்க – பதிலடி கொடுத்த புஜாரா
ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும் அவரது கேப்டன்ஷிப் செயல்பாடு அற்புதமான வகையிலேயே இருந்தது. எனவே இந்த ஆண்டும் மகேந்திர சிங் தோனியின் வழிநடத்தலோடு அவர் தனது கேப்டன் பதவியை சிறப்பாக மேற்கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல பேட்டிங்கிலும் அற்புதமான திறனை வெளிக்காட்டுவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.






