தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 6வது போட்டியில் சென்னை சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் சொப்னில் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்
கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர் மோகித் ஹரிஹரன் 2 ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரர் ஆஷிக் மற்றும் கேப்டன் பாபா அபாராஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 56 பந்துகளில் 83 ரன்கள் குவித்தது.
ஆஷிக் 38 பந்துகளில் 54 ரன் மற்றும் கேப்டன் பாபா அபராஜித் 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்கு பின்னர் களம் இறங்கிய விஜய் சங்கர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இதில் இறுதி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் சொப்னில் சிங் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 45 ரன்கள் குவித்தார். இதனால் சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.
ஆர்சிபி வீரர் அபாரம்
இதில் அதிகபட்சமாக நெல்லை அணியில் யுத்தீஸ்வரன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி நெல்லை அணி களம் இறங்கியது. நெல்லை அணியில் கேப்டன் அருண் கார்த்திக் தொடக்க வீரராக களம் இறங்கி ஒரு முனையில் போராட, மறுமுனையில் வரிசையாக மற்ற அனைவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ்குமார் 10 ரன், ஹரிஷ் 14 ரன், குருசாமி ஒரு ரன், ரித்திக் ஈஸ்வரன் 12 ரன், நிர்மல் குமார் 3, சோனு யாதவ் 12 ரன்னில் நடையை கட்டினார்கள்.
இதையும் படிங்க:தோனிக்கு ICC Hall of fame கவுரவம்.. ஹைடன், அம்லா உள்ளிட்ட 7 வீரர்களுக்கு கிடைத்த பெருமை
இதில் இறுதி கட்டத்தில் அத்னன் கான் ஓரளவு அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதில் கேப்டன் அருண் 42 பந்துகளில் 51 ரன் எடுத்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் பேட்டிங்கில் கலக்கியதோடு மட்டுமல்லாமல், பந்து வீச்சிலும் கலக்கிய சொப்னில் சிங் 2 விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்